இசையமைப்பாளர் தேவாவின் இசையில் என்ன பாடல் பிடிக்கும் என்று கேட்டால் எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகளைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைக் குறிப்பிடுவார்கள்.
அவற்றில் ஒன்றாக விளங்குவது சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ படத்தில் இடம்பெற்ற ‘முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்தது’ பாடல். அதில் ஹீரோவாக நடித்த ராஜிவ் கிருஷ்ணாவும் ஹீரோயினாக நடித்த சுலேகாவும் என்ன ஆனார்கள் என்ற கேள்வி, அப்பாடலைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஓடும்.
இரண்டொரு மலையாளப் படங்களில் நடித்த சுலேகா, பின்னர் கல்யாணம், கார்பரேட் நிறுவனப் பணி என்று செட்டில் ஆகிவிட்டதாகத் தகவல்.
‘தேவராகம்’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘அசல்’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த ராஜிவ் கிருஷ்ணா மலையாளம், இந்தி எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு டஜன் படங்களில் கூட நடித்திருக்க மாட்டார்.
ரேவதி இயக்கிய இந்திப் படங்களில் இயக்குனராகப் பணியாற்றிய ராஜிவ், பிறகு ‘வுட்ஸ்டக் வில்லா’, ’சவுண்ட்ராக்’, ‘தக்கட்’ ஆகிய படங்களின் கதை, திரைக்கதையாக்கத்தில் பங்களித்திருக்கிறார். இரண்டு ஆங்கில நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார்.
ராஜிவ் கோபாலகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தற்போது ராஜிவ் ஜி மேனன் என்ற பெயரில் ‘120 பஹதூர்’ எனும் படத்திற்குக் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார். ரஜனீஷ் ஹாய் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பர்ஹான் அக்தர். நாயகி ராஷி கன்னா.
1962ஆம் ஆண்டு நடந்த இந்திய – சீனப் போரின்போது ரெசாங் லா எனுமிடத்தில் திரண்ட 3000 சீன வீரர்களை எதிர்த்து 120 இந்திய வீரர்களுடன் போராடிய மேஜர் சைத்தான் சிங் பாடி என்பவரின் வாழ்வைச் சிறப்பிக்கும் படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழில் வெளியான ‘அமரன்’, தெலுங்கில் வெளியான ‘சீதாராமம்’ படங்களுக்கு முன்னரே இந்தியில் ராணுவத்தினரை மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள ‘120 பகதூர்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.
உண்மைக்கு நெருக்கமான காட்சியாக்கத்தின் வழியே ஒரு ‘நாயக சாகசத்தை’ச் சொல்வதென்பது அற்புதமான திரையனுபவத்தைத் தரும். அந்த வகையில் ஒரு ஈடிணையற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படமும் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்க வாய்ப்புகள் அதிகம்.
இப்படியொரு படத்தின் திரைக்கதையாக்கத்தில் பங்கேற்பது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுத் தரும். அந்த வகையில், நீண்ட காலம் கழித்து ராஜிவ்வின் இந்த அவதாரம் ரசிகர்களைச் சுண்டியிழுக்கும் என்று நம்பலாம்..
அதேநேரத்தில், ராஜிவ்வின் இன்றைய புகைப்படங்களைப் பார்க்கையில் ‘ஆஹா’ காலத்து நினைவுகள் சில ரசிகர்கள், ரசிகைகள் மனதில் நிழலாடும்.. ‘எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரே’ என்றும் சிலர் சொல்லக்கூடும்..!