மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன், தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்றது.
இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கீழடி உள்ளிட்ட அகழாய்வு அறிக்கைகளை முடக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (Tamil Nadu Assured Pension) அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
