2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் (TVK General Council Vijay CM Candidate) அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இன்று (நவம்பர் 5) நடைபெற்ற தவெக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்:
தீர்மானம் 1: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் (வாசித்தவர்: கரூர் மா.செ.மதியழகன்)
தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத லட்சிய நோக்கச் செயல்வடிவத்தின் முதல்படியாக நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் வெற்றித் தலைவரின் அனல் பறக்கும் பேச்சும், ஆளும் தரப்பை நோக்கி எழுப்பிய கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத, இந்திய அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம் வெற்றித் தலைவருக்கு மக்கள் அளித்த வரவேற்பு இருந்தது. இது ஆள்வோருக்கும் அதிகார வெறி கொண்டவர்களுக்கும் எரிச்சலூட்டியது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி அன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து, கரூரில் நடைபெற்ற நம் வெற்றித் தலைவரின் மக்கள் சந்திப்பில், திட்டமிட்டு, கற்பனைக்கும் எட்டாத வகையில், பாதுகாப்புக் குறைபாடு மற்றும் இன்னபிற செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று எண்ணத்தக்க வகையில் அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதில், நம் குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர். தமிழக அரசியல் வரலாற்றில், மாற்றத்தை விரும்பும் மக்களரசியலை மையமாகக் கொண்ட நம் இலட்சியப் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள வந்து உயிர்நீத்த நம் சொந்தங்களான அந்தத் தியாகிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 2: பெண்கள் பாதுகாப்பு (வாசித்தவர்: திருப்பூர் பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பாலமுருகன்)
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அதற்குள் கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகள் நடந்தவண்ணம் இருப்பதால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து துன்பம் நேர்கிறதே, காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தூக்கம் களைந்து எப்போது எழுவார்? என்றும் தெரியவில்லை.
இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது என்பதைக் கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க. அரசுக்கு வன்மையான கண்டனங்களையும் இச்சிறப்புப் பொதுக்குழு பதிவு செய்கிறது.

தீர்மானம் 3: தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் (வாசித்தவர் கள்ளக்குறிச்சி கிழக்கு மா.செ. விஜய் பரணி பாலாஜி)
இதுவரை நம்முடைய மீனவச் சகோதரர்கள் 800 பேருக்கு மேல், இலங்கைக் கடற்படை தாக்கி மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நம் மீனவச் சகோதரர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலும் கைது நடவடிக்கையும் ஈவு இரக்கமின்றி, தொடர்ந்து நீடித்த வண்ணமே உள்ளன.
சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. அத்தோடு, அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளையும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது.
இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஓர வஞ்சனையுடன் கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே போல, நம் மீனவச் சகோதரர்கள் விஷயத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு, கண்மூடித் துயில் கொள்வதே வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் வாடிக்கையாகிவிட்டது.
கைது செய்யப்பட்ட நம் மீனவச் சகோதரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல் உண்மையாகத் தர வேண்டும். மேலும், நம் மீனவச் சகோதரர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிய அரசு நகர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4: தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்துக (வாசித்தவர்: கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார்)
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே இருக்கிறது. சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில், பீகாரில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதே அதற்குச் சான்று. பீகாரில் நடந்த அந்தப் பெயர் நீக்கம் குறித்த காரணங்களே இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெறும் என அறிவித்து, இந்தியத் தேர்தல் ஆணையம் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.
சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. போலி வாக்காளர்கள், போலி முகவரி, தவறான புகைப்படங்கள் என இந்த முன்னெடுப்பில் உள்ள குழப்பங்களை நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து பட்டியலிட்டும் வருகின்றன. வழக்கில் ஒரு தீர்வு எட்டப்படாமல், தற்போது நிலவும் குழப்பங்களுக்கு ஒரு முடிவு எட்டப்படாமல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையிலும் முறையில்லை. மேலும், தமிழகத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் ஒரு மாத காலமே அவகாசம் கொடுத்துள்ளது. ஆறு கோடி வாக்காளர்களுக்கும் மேல் இருக்கும் தமிழ்நாட்டில் அத்தனைப் பெயர்களையும் சரிபார்க்க ஒரு மாத காலம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? அவசர கதியில் நடைபெறும் இப்பணிகளால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பாதிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே நியாயமான, எந்தவித அரசியல் குறுக்கீடுமற்ற, சுதந்திரமான தேர்தல் நடைபெற, சிறப்புத் தீவிரத் திருத்தம் எனும் இந்தக் குழப்பமான நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் பழைய நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம். (வாசித்தவர் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆர். பார்த்திபன்)
இரவு பகல் பாராமல் உழைக்கும் விவசாயி, ஒவ்வொரு நெல்மணியையும் தன் பிள்ளையைப் போல் கருதிப் பாதுகாப்பார். ஆனால், ஒவ்வொரு விவசாயியையும் தன் பிள்ளையைப் போல் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், அவர்களை வேதனையில் மூழ்கடித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு ஏறத்தாழ 6 லட்சத்து 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. பருவ மழை, மேட்டூர் அணையில் நீர்வரத்து எல்லாம் சரியாக அமைந்ததாலும் ஆயிரக்கணக்கில் விவசாயத்திற்குச் செலவு செய்ததாலும் இந்த ஆண்டு கூடுதலாக விளைச்சல் கிடைத்தது. இப்படி விவசாயிகளின் கடும் உழைப்பால் கூடுதலாக அறுவடையான நெல்லைக் கொள்முதல் செய்ய, அதிக அளவில் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல், ஏற்கெனவே இருக்கும் சேமிப்புக் கிடங்குகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யாமல், தற்காலிகமாகப் புதிய சேமிப்புக் கிடங்குகளையும் அமைக்காமல் வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசு தூங்கிக்கொண்டிருந்தது. அதைவிடத் துயரம் என்னவென்றால், மழை வந்துவிட்டால் நெல்லைப் பாதுகாக்கத் தார்ப்பாய்களைக் கூட ஏற்பாடு செய்யவில்லை. சாக்குகள், சணல், போதுமான லாரிகள் ஆகியவற்றையும் சுமை தூக்கும் தொழிலாளர்களையும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் பாடுபட்டு விளையவைத்த நெல்லில் சுமார் 20 லட்சம் டன் நெல் வீணாகி உள்ளன. இந்த லட்சணத்தில்தான், விவசாயத்திற்குத் தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் அரசு என இந்தத் தி.மு.க அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் இந்த அலட்சியத்தைத் த.வெ.க. பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், வீணான நெல் மூட்டைகளுக்கும், மழையில் மூழ்கி அழுகிப்போன சம்பா நெற்பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6: வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும் (வாசித்தவர்: ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் விஜய பாலாஜி)
விதிமுறை மீறிய கட்டடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், வடிகால் வசதிகளை மேம்படுத்தாத அலட்சியம் என ஆண்டாண்டுக் காலமாக ஆட்சி செய்தவர்கள், அழகிய சென்னை மாநகரின் கட்டமைப்பை மேம்படுத்தாமல், இருந்த கட்டமைப்பையும் சீர்குலைத்தே வைத்துள்ளனர் என்பதை இந்த வடகிழக்குப் பருவமழை வலுவாக விளக்கி உள்ளாது. சிங்காரச் சென்னை என்று சொன்னவர்கள் சீரழிந்த சென்னையைத்தான் உருவாக்கினார்கள். இந்தச் சீரழிவுகளுக்கு முக்கியக் காரண கர்த்தாக்கள், இன்றைய ஆளும் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் இருப்பவர்களுமே. இவர்களே இந்தச் சீரழிவிற்கு மூல காரணமாக இருக்கின்றனர் என்பது மறுக்க இயலாத உண்மை.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால்வாய்கள் சென்னையில் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். ஆட்சி அமைந்து நான்கறை ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடக்கும் பணிகள் இன்னும் முடியவே இல்லை. வேலை நடக்காதது ஒரு பக்கம் என்றால், வேலைக்காகத் தோண்டிப் போட்டு, இருக்கிற அமைப்பையும் கெடுத்து வைத்துள்ளது ஒரு பக்கம் எனச் சென்னை மக்களுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் துயரத்தைத்தான் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கிவிட்டது. இன்னும் டிசம்பர் மாதம் வரை மழை நீடிக்கும். எனவே, தொடங்கிய மழை நீர் வடிகால் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். மழை, வெள்ளத்திலிருந்து சென்னை மக்களைத் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். அதுபோல், ஏற்கெனவே இருந்த கட்டமைப்புகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மழை நீர் வடிகால் வசதிகள் இல்லாத பகுதிகளில் வெள்ளம் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7: பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் (வாசித்தவர் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் கேத்ரின் பாண்டியன்)
ஈர நிலங்களைக் காக்கச் சர்வதேச நாடுகள் அனைத்தும் பின்பற்றும் உடன்படிக்கை ‘ராம்சர்’. அந்த உடன்படிக்கையின்படி, சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்திற்கு 2022 ஏப்ரல் 8-இல் ராம்சர் அங்கீகாரம் கிடைத்தது. இந்த அங்கீகாரம் பெற்ற நிலப்பரப்பில் எந்தவிதக் கட்டுமானமும் கட்டக் கூடாது என்பதுதான் அந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சம். பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்திருக்கும் ஓர் உத்தரவிலும், ‘சதுப்பு நிலத்திலோ, அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலோ கட்டுமானங்கள் கூடாது’ எனத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
ஆனால் இந்த விதிமுறைகளை மீறி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அந்த நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுமானம் கட்ட, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அந்த நிறுவனம் முதலில் விண்ணப்பித்திருக்கிறது. ஆணைய அனுமதியைத் தொடர்ந்து வனத்துறை தடையில்லாச் சான்றிதழ் வழங்க, சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட எந்தத் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் ராம்சர் உடன்படிக்கையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கவில்லை. இதனால் இந்த அனுமதி, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஒத்துழைப்போடுதான் நடந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. பலகோடி ரூபாய் அளவிற்கு இதில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது என வெளியான பத்திரிக்கைச் செய்திகளும் இதற்கு வலுச் சேர்ப்பதாக இருக்கின்றன.
எனவே, விதிமுறைகளைத் தாண்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரின் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழுத் தீர்மானம் வழியாக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 8: மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். (வாசித்தவர்: நெய்வேலி வழக்கறிஞர் யாஸ்மின்)
தாய்த் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், நம் வெற்றித் தலைவருக்கும் நமது உணர்வோடு கலந்துவிட்ட தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்திற்கும் கொடுத்த வரவேற்பைத் தமிழக மக்கள், தற்போது இருக்கும் வேறு எந்தத் தலைவருக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் கொடுத்ததில்லை. நம் தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் வரலாறு காணாத வரவேற்பும் நம் தலைவர் நடத்திய மாநாடுகளில் எல்லாம் சரித்திரம் காணாத சாதனை எழுச்சியும் தானாகவே அமைந்ததை இந்த நாடே பார்த்தது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காகக் காலம் காலமாகக் காத்திருப்போர் என ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கக்கூடிய மகத்தான தலைவர் கலந்துகொள்ளும் பொதுநிகழ்ச்சிகளுக்கு, வேண்டுமென்றே ஆளும் தி.மு.க. அரசின் அழுத்தத்தால், அரசு இயந்திரம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில்லை. நம் தலைவருக்குப் பின்னால் நம்பிக்கையோடு அணி திரளும் மக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்வதில்லை. கரூரில் நம் தலைவர் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், நாம் குறிப்பிடும் குற்றச்சாட்டுகளுக்குக் கண் முன் சாட்சிகளாக இப்போதும் இருக்கின்றன.
நம் பயணத்தைத் தடுக்க முட்டுக்கட்டை போடும் விதிமுறைகள், நம் குரலை ஒடுக்கத் தேவையற்ற விதிமுறைகள், அலைக்கழிப்புகள் என்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும், நம் தலைவரின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் வேண்டுமென்றே அலட்சியமாக – அஜாக்கிரதையாக செயல்படுகின்றன. ஒருதலைப்பட்சமான அரசாங்கத்தின் இந்தப் பாகுபாட்டையும், அரசு இயந்திரத்தின் அலட்சியத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்காலத்தில் இந்தக் குறைபாடுகளைக் களைந்து, நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நாயகராய்த் திகழும் மகத்தான மக்கள் தலைவரான நம் தலைவருக்கும், அவரின் பின்னால் அணிவகுக்கும் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9: கழகத்தின் மீதும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம். (வாசித்தவர்: துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ஶ்ரீதரன், Ex. MLA)
தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. தலைமையில் நடந்துகொண்டிருக்கும் அரசாங்கத்தை, “வெற்று விளம்பர மாடல் அரசு” என்று நாம் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை என்பதை இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளே ஒவ்வொரு நாளும் அம்பலப்படுத்துகின்றன. ஆளும் தரப்பின் உறவினர்களால் நடத்தப்படும் தனியார் நிறுவனங்கள், விலைபோன ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நண்பர்கள், ஐ.டி. விங் என்ற பெயரிலும், பேக்ட் செக் என்ற பெயரிலும் அரசாங்கத்தின் இயக்கத்தையே கட்டுப்படுத்தி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரைமறைவு அழிவு சக்திகள், மகத்தான மக்கள் தலைவராக உருவெடுத்துள்ள நம் தலைவரையும் நாளைய தமிழகத்தின் அரசியல் வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நம் தமிழக வெற்றிக் கழகத்தையும் நம் கழகத்தின் உயிராகவும் உணர்வாகவும் செயல்படும் நம் கழக நிர்வாகிகளையும் பற்றிப் பொய்யான – வன்மமான – நேர்மையற்ற வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை நேர்மையாக – உண்மையாக – ஆதாரங்களோடு சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் வழக்கு – கைதுகளால் மிரட்டும் தி.மு.க. அரசு, அவதூறு பரப்பும் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களை மறைமுகமாக உற்சாகப்படுத்தி வருகிறது. அதனால், எந்த விதமான நியாய தர்மமும் இன்றி, ஆளும் கட்சியின் அவதூறுக் குழுக்கள் அராஜகமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கட்சியைத் தொடங்கியவரும், நமது கழகத்தின் ஆதர்ச தலைவராகவும் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன, “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” என்ற கோட்பாட்டைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, “ஊழல் – அவதூறு – அராஜகம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் ஆளும் கட்சியின் கூலிப் படையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 10: தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் (வாசித்தவர்: பொருளாளர் வெங்கட்ராமன்)
முதல்வராகப் பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டுகளில் ஐந்து முறைகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏழு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். ஒவ்வொரு முறை நாடு திரும்பும் போதும் பல்லாயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக அறிவிக்கிறார்.
ஆட்சியின் தொடக்கக் காலத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன? எங்கெங்கெல்லாம் தொழிற்சாலைகள் உருவாகியிருக்கின்றன, அவற்றின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்பன பற்றிய அதிகாரப்பூர்வத் தரவுகள், இப்போது வரை வெளியிடப்படவில்லை. இதனால் இந்த அறிவிப்புகள் வெறும் விளம்பரத்திற்காகவா என்கிற கேள்வியும் எழுகிறது. சமீபத்தில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கே முதலீடு செய்யவிருப்பதாகத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் அறிவித்ததும் உடனே அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்ததும் சட்டமன்றத்திலேயே விவாதப் பொருளானது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அவை குறித்த தரவுகளை வெளியிடுவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லையே. ஒருவேளை அப்படி வெற்று விளம்பரத்திற்காக இந்த அறிவிப்புகள் என்றால், அதற்கு மக்கள் வரிப்பணத்தைச் செலவழித்து முதல்வர் வெளிநாடுகள் செல்வதும் முறையாகாது. எனவே இந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்துள்ள முதலீடுகள், அவற்றின் தற்போதைய நிலை, இவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்துத் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11: தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம். (வாசித்தவர்: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிஜி)
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், நம் தாய்த் தமிழகத்தின் சாபக்கேடாகத் தி.மு.க. தலைமையிலான அரசாங்கம், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் செயல்பாடுகள், சர்வாதிகார முறையில் இருக்கின்றன.
எதிர்க்கட்சியினர், அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்கள், அரசாங்கத்தில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் கருத்துரிமை, பேச்சுரிமை, செயல்படும் உரிமை என அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளும் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நசுக்கப்படுகின்றன.
“இம்மென்றால் சிறைவாசம்… ஏனென்றால் வனவாசம்” என்பது போல ஜனநாயக சக்திகளின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. பொய் வழக்குகள், கண்துடைப்பு சம்மன்கள், அச்சுறுத்தும் விசாரணைகள், ஆள்தூக்கிச் சட்டங்கள் ஆகியவற்றை வைத்து ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையைப் போன்று இன்று நடத்தப்படும் கைதுகள், மர்மமாக நடைபெறும் லாக்கப் மரணங்கள் என்று சர்வாதிகார மாடல் ஆட்சியைத் தி.மு.க தலைமையிலான இந்த அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை, தாங்கள் செய்யும் தவறுகளுக்குச் சத்தமில்லாத கூட்டாளிகளாக மாற்றி, விலைபோகும் ஊடகங்களை விலைக்கு வாங்கி, தி.மு.க. அரசு மோசமான முன்னுதாரணத்தைத் தமிழக அரசியல் களத்தில் விதைத்துள்ளது. விலைபோகாத ஊடகங்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எதிர்க்கட்சிகளையும் வழக்கு, விசாரணை, கைது என்பனவற்றைப் பயன்படுத்தி அச்சுறுத்துகிறது. இது தமிழக அரசியல் சூழலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்து என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, சர்வாதிகார மாடல் தி.மு.க. அரசின் அராஜக – சர்வாதிகாரப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 12: கூட்டணி நிலைப்பாட்டில் தலைவருக்கு முழு அதிகாரம்
தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது.
தவெக தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகர், கோவை மாநகர மா.செ. சம்பத் குமார் உள்ளிட்டோர் இந்த தீர்மானங்களை முன்மொழிந்தனர், வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
