தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டிஜிபி பதிலளிக்க நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இருளாண்டி உயர் மதுரை அமர்வில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் அணைப்பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கூட்டம் நடைபெற்ற இடத்தை கடந்தார்.
அப்போது அதிமுக கூட்டங்கள் நடக்கும் பகுதிகளில் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாக செல்வார் என மிரட்டினார். மிரட்டல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதைத்தொடரந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சியில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தின் போது மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்திருந்த போது அங்கிருந்து அதிமுக உறுப்பினர்கள் டிரைவரை தாக்கி ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரைவது தமிழகம் முழுவதும் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியது யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.