சைபர் குற்றம்… கம்போடியாவில் 105 இந்தியர்கள் கைது… ஆடிப்போன அமலாக்கத்துறை!

Published On:

| By Minnambalam Desk

105 indians arrested in kambodia for cyber crime

சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பி சென்ற இந்தியர்கள் கடத்தப்பட்டு, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் உள்ள இணையதள மோசடி மையங்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த பன்னாட்டு சைகோ-டிஜிட்டல் குற்றவாளிகள் குழு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலரை வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றி, பின்னர் அவர்களிடமிருந்து பண மோசடி, முதலீட்டு ஏமாற்று மோசடி உள்ளிட்ட செயல்களில் கட்டாயமாக ஈடுபடச் செய்துள்ளது.

ADVERTISEMENT

சிக்கியது எப்படி?

சமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற பெரிய அளவிலான காவல் துறை நடவடிக்கையில் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 105 இந்தியர்களும் மற்றும் 81 பாகிஸ்தானியர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தின் பின்புலத்தில் விரிவான விசாரணை நடத்தும் பணியை இந்தியாவின் அமலாக்கத்துறை (ED) இறங்கியுள்ளது.

ED அறிக்கைகளின்படி, இந்த மோசடிகளுக்கான மையங்கள் பெரும்பாலும் தெற்காசிய நாடுகளில் உள்ள ‘Golden Triangle’ (தாய்லாந்து, மியான்மார், லாவோஸ் எல்லைப்பகுதி) பகுதியில் உள்ளன.

ADVERTISEMENT

இந்தப் பகுதி பழங்காலமாகவே மனிதக் கடத்தலும், போதைப்பொருள் வணிகமும், சட்டவிரோத வேலைகளுக்கும் உதவும் இடமாக இருந்தது.

வேலைவாய்ப்பு என்ற பெயரில் வலைவீச்சு!

இந்த மோசடியில் பலர் Instagram, Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வேலைக்கு அழைக்கப்பட்டனர்.

ஒருவர் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு என நம்பி செல்ல, லாவோசில் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, மோசடி மையத்தில் வேலை செய்ய வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ‌மனீஷ் தோமர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பாபி கட்டாரியா (Bobby Kataria) என்ற நபரால் வேலைவாய்ப்பு வழிகாட்டப்பட்டு, லாவோசுக்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள சில சீனர்கள் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, Golden Triangle பகுதியில் கட்டாயமாக மனிதர்களிடம் முதலீட்டு மோசடி செய்யும் பணியில் ஈடுபட வைத்தனர்.

பால் என்பவர் கூறும் கொடூர அனுபவம்!

இதேபோன்று, பால் என்ற நபர் துபாயில் வேலை என நம்பிய சென்றபோது, கம்போடியாவில் உள்ள Poim Phet பகுதியில் இருந்த ‘Digital Arrest Scam Centre’ என்ற மோசடி மையத்தில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு “CBI அதிகாரியாக” நடித்து இந்தியர்களை பயமுறுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அவர் மேலும் கூறுகையில், போலீசாராக நடிக்க வைத்தனர். வீடியோ அழைப்புகளில் போலீஸ் யூனிஃபார்மில் உதட்டு ஒத்திசைவு (lip-sync) செய்யும் ஒருவருடன் சேர்ந்து, இந்தியர்களை “உங்கள் பெயரில் சட்டவிரோத வழக்கு உள்ளது” என பயமுறுத்தி பணம் பறித்தேன் என்று கூறியுள்ளார்.

மூன்று விதமான மோசடி முறை:

TRAI அதிகாரியாக நடித்து தொடர்பு கொள்வது

போலீசாராக நடித்து பயமுறுத்துவது

போலீஸ் துணை ஆணையராக (DCP) நடித்து “உதவி” செய்து பணம் கேட்பது

இந்த மூன்று கட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்த நுட்பமான மோசடி அமைப்பாக செயல்பட்டு வந்தன.

பணமோசடி எப்படி நடந்தது?

இந்த குழுவை சேர்ந்தவர்கள், மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக இந்தியர்களிடம் கிரிப்டோ கரன்சி மூலமாக பணம் அனுப்ப வைத்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்:

ஃபரிதாபாதில் – ஒரு பெண் ₹7.59 கோடி இழந்தார்

நொய்டாவில் – ஒரு தொழிலதிபர் ₹9.09 கோடி இழந்தார்

பதிந்தாவில் – ஒரு மருத்துவர் ₹5.93 கோடி இழந்தார்

அவர்கள் அனைவரும் போலியான WhatsApp முதலீட்டு குழுக்களில் சேர்க்கப்பட்டு, புதிய முதலீட்டு செயலிகள் மூலம் பணம் செலுத்தச் சொல்லப்பட்டனர்.

இந்த மோசடி வளையத்தை முற்றிலும் களைய, இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து பணியாற்றுகின்றன.

இந்தியா அமலாக்கத்துறை 8 இந்தியர்களை கைது செய்து, ரூ.3 கோடி பணத்தை இந்திய வங்கிகளில் முடக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share