நீதிக்கேட்டு மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் என்ற தலைப்பில் நீதி கேட்டு உண்ணா நிலை அறப்போராட்டத்திற்கு மல்லை சத்யா அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்ற மல்லை சத்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிம்சன் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்தார்.
அதன்பின்னர் தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் இன்று காலை 9 முதல் அவரது தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது.

முதலில் மதிமுகவின் பொருளாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஈரோடு கணேசமூர்த்தி மற்றும் திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய தருணத்தில் உயிர்நீத்த 5 பேருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் அவருடன் மதிமுக இளைஞரணி மாநில இணைச் செயலாளர் கராத்தே பழனிசாமி, திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் கொடைக்கானல் பாபு, விழுப்புரம் மாவட்ட அவை தலைவர், செங்கல்பட்டு முன்னாள் மாவட்ட செயலாளர் ஊனை பார்த்திபன், தஞ்சாவூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உட்பட ஒன்றிய, மாவட்ட முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் ஆயிரம் பேர் வரை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

தனது ஆதரவாளர்களிடையே மல்லை சத்யா பேசுகையில், “தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக இருந்தார் வைகோ… மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி இருக்கிறது மதிமுக. அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் அலட்சியப்படுத்துவதும் அவமானப்படுத்துவதும் அலை கழிப்பதுமாக உள்ளது.
இதற்கிடையே கடந்த ஒன்பதாம் தேதி ’மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்‘ என்று சொன்ன காரணத்தினால் மக்களிடம் நீதி கேட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளேன். மதிமுகவில் நான் இன்றைக்கும் துணை பொதுச்செயலாளராக தான் நீடித்துக் கொண்டிருக்கின்றேன். அவரும் நீக்கவில்லை நானும் விலகவில்லை. உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்” என மல்லை சத்யா தெரிவித்தார்.