சென்னையில் இன்று (டிசம்பர் 7) 100-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் உத்தரவையும் மீறி 5 மடங்கு கட்டணத்தை விமான சேவை நிறுவனங்கள் வழங்குவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேர கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. ஆனால் இண்டிகோ நிறுவனம் இதில் அலட்சியமாக இருந்ததால் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன; இதனால் இண்டிகோ விமானத்தில் பயணிக்க காத்திருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து விமான நிலையங்களில் அலைகழிக்கப்பட்டனர்.

சென்னையில் நேற்று காலை முதல் இரவு 11.50 மணி வரை சென்னைக்கு வர வேண்டிய 44 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 52 இண்டிகோ விமானங்கள் ரத்தாகின.
சென்னையில் இன்றும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின. இண்டிகோ விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய்துவிட்டு வேறு விமானங்களில் பயணித்தனர்.
இதனிடையே விமான பயண கட்டங்களை வரலாறு காணாத அளவில் விமான சேவை நிறுவனங்கள் உயர்த்தியது பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் விமான பயண கட்டணம் அதிகபட்சமாக ரூ18.000 வரை மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனாலும் கூட, விமான சேவை நிறுவனங்கள் தொடர்ந்து 5 மடங்கு கட்டணம் வசூலித்து வருகின்றன.
இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 24 மணிநேரத்துக்குள் விளக்கம் தர வேண்டும் என அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.
