விஜய், தவெக மாநாட்டின் தொடக்கமாக கொடியேற்ற இருந்த 100 அடி உயர கம்பம் திடீரென சாய்ந்தது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு நாளை மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை பிற்பகல் 3.15மணிக்கு தொடங்கி இரவு 7.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாட்டில் பங்கேற்க, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா மதுரைக்கு வந்துந்துள்ளனர்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டு வாயில் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தை ராட்சத கிரேன் மூலம் நிறுத்தும் பணி இன்று நடைபெற்றது.
கொடிக்கம்பம் சரிந்தது எப்படி
கொடிக்கம்பம் நடப்பட்டு சில நிமிடத்திற்குள் எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. இதில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் சரிந்தது. கார் முழுவதும் சேதமடைந்தது. 100 அடி கொடிக்கம்பமும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தரைமட்டத்திலிருந்த பில்லருக்கும், அதன் மேல் நிறுத்தப்பட்ட கம்பத்துக்கும் முதலில் இரண்டு போல்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து போல்டுகள் போடுவதற்குள் பேலன்ஸ் தாங்காமல் கம்பம் சாய்ந்துள்ளது.
சிறிய ரக கிரேன் பயன்படுத்தப்பட்டதும் விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்பம் நிறுவ பயன்படுத்தப்பட்ட கயிறும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது
சாய்ந்த கம்பத்தை அகற்றும் பணிகளும் தற்போது தொடங்கி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் திருமங்கலம் ஏஎஸ்பி அன்சூல் நாகூர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிக எடை கொண்ட கம்பம் என்பதால் காலையில் இருந்து யாரையும் நாங்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதைமீறி சிலர் உள்ளே வந்தனர். இந்த கம்பத்துக்கு மாற்று ஏற்பாடு என்னவென்று விஜய்யிடம் கேட்டு பொதுச்செயலாளர் முடிவு செய்வார். இது ஒரு சின்ன விபத்து. தவெக தலைவர் விஜய் மாநாட்டுக்காக வரும் மக்களுக்காக அத்தனை வசதிகளையும் பார்த்து பார்த்து செய்ய சொல்லியிருக்கிறார். 8000 மீட்டர் நீளத்துக்கு தண்ணீர் பைப் போடப்பட்டுள்ளது. எந்தவொரு இடையூறும் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு பெரிய இடம் தேர்வு செய்யப்பட்டது. 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.
பிளக்ஸ் பேனர் வைத்த மாணவன் பலி
இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தவெக மாநாட்டுக்கு வரவேற்பு பேனர் வைத்த காளீஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் தற்போது கொடிக்கம்பம் சரிந்ததும் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.