தமிழகத்தில் 2 நாட்களில் சிக்கிய ரூ. 23.28 கோடி ரொக்கப் பணம், பரிசு பொருட்கள்!

Published On:

| By Mathi

Election Commission

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மார்ச் 17-ந் தேதி வரை ரூ 23.28 கோடி ரொக்கப் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

  • ஒரு வேட்பாளர் சட்டசபை தேர்தலின்போது அதிகபட்சம் ரூபாய் 40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும்.
  • வேட்பாளரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  • தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்திட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை / நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
  • தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள், 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனார்.
  • இக்கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்றுவரை (17/03/2026) ரூபாய் 23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.
  • பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் அனைத்து தரப்பினராலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
  • அதன்படி இன்று (17.03.2026) வரை தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி காலம் சென்ற / மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவேண்டியதில்லை என்றும், தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டிருந்தால் அவைகள் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு வந்தவுடன், மறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share