வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 80) உடல்நலக் குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் கலீதா ஜியா.
வங்கதேச ராணுவ துணை தளபதியாக இருந்து ஆட்சியைப் பிடித்து, பின்னர் அதிபராகப் பதவி வகித்த ஜியாவுர் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியா.
வங்கதேச அதிபராக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகு ஜியாவுர் ரஹ்மான் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், சில ஆண்டுகளில் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, கலீதா ஜியா அரசியலில் நுழைந்தார்.
1990-ல் ராணுவத் தளபதி எர்ஷாத்தின் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஷேக் ஹசீனா நடத்திய தொடர் போராட்டத்தில் கலிதா ஜியாவும் இணைந்துகொண்டார். எர்ஷாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை கலீதா ஜியா படைத்தார்.
வங்கதேச பிரதமராக முதன்முறையாக 1991 மார்ச் முதல் 1996 மார்ச் வரை பதவி வகித்தார் கலீதா ஜியா. பின்னர் 2001 ஜூன் முதல் 2006 அக்டோபர் வரை 2-வது முறையாகவும் பிரதமராக அவர் பதவி வகித்தார்.
2018 ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நீரிழிவு, இதயம், நுரையீரல் தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
2024-ல் வங்க தேச அதிபர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் கலீதா ஜியாவை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கலிதா ஜியா உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) காலமானார்.
தாரி ரஹ்மான்
கலீதா ஜியா மகன் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தை விட்டு தப்பி லண்டனில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் கலீதா ஜியா கட்சிக்கு மக்கள் அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், லண்டனில் இருந்து கடந்த வாரம் தாய்நாடு திரும்பினார். டாக்கா விமான நிலையத்தில் தாரிக் ரஹ்மானுக்கு அவரது ஆதரவாளர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் அளித்த வரவேற்பு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்நிலையில் தாயார் கலீதா ஜியா இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
