பராசக்தி படம் பரப்புரைப் படம் இல்லை. நான் பரப்புரையும் செய்யவில்லை என பிரதமர் பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது படமான பராசக்தி திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பராசக்தி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் இருவரும் கலந்து கொண்டனர். படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் பொங்கல் விழாவில் இசைக் கச்சேரியை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சியினர் பராசக்தி படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள். மக்கள் பராசக்தி படத்தை சரியான வகையில் புரிந்து கொண்டுள்ளனர். படத்தில் எந்தவித சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை.
பராசக்தி படம் பரப்புரைப் படமும் இல்லை. அதற்காக நான் பரப்புரை செய்யவும் இல்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஏற்கனவே வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளேன். ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
