பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த சு.வெங்கடேசன் எம்.பி-க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 29) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சு.வெங்கடேசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 28) பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் நடந்த விவாதத்தின் போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக பேசியிருந்தார்.
அவர், ”பஹல்காம் தாக்குதலின் போது பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார்; அங்கிருந்து பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மோடி, நேராக பஹல்காம் செல்வார்.. காஷ்மீர் செல்வார் என எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் பீகார் தேர்தல் பிரசாரத்துக்குதான் சென்றார். எங்கள் எல்லோரது இதயங்களிலும் தேசம் இருந்தது. ஆனால் உங்கள் இதயங்களில் தேர்தல் இருந்தது” என பிரதமர் மோடியை வார்த்தைகளால் விளாசினார்.
அதனைத்தொடர்ந்து நேற்று இரவு அவருக்கு தெலைபேசி மூலம் மர்ம நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் பேசிய நபர் “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்” என்று கொலை மிரட்டல் விடுத்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே தமிழக டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தலின் பேரில், மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இன்று இரவுக்குள் கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.