ஆரோன், செ.வித்யா
உலகில் உள்ள உயிரினங்களில் சிந்திக்கும் திறனும், அதைச் செயல்படுத்தும் திறனும்கொண்ட இனம், மனித இனம். இந்த மனித இனத்தில் கிடைக்கும் ஒரு வரம் குழந்தை பருவம்.
குழந்தைப் பருவத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஒரு குழந்தையின் அழுகை, மழலை, சிரிப்பு இவற்றை ரசிக்கத் தெரிந்தால் இதற்கு விடை கிடைத்துவிடும்.
உலகிலேயே அதிகக் குழந்தைகளைக்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போதைய காலகட்டத்தில் பிறக்கிற குழந்தைகள் ஐ-போன், ஐ-பேட், டேப்லட் போன்றவற்றை எல்லாம் அம்மாவின் கருவறைக்குள்ளேயே கரைத்துக் குடித்துவிட்டுத்தான் வெளியே வருகிறார்கள்போல. அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்துடன் அவர்கள் நெருக்கமாக, இணக்கமாக இருக்கிறார்கள்.
இன்றையச் சுற்றுப்புறச் சூழ்நிலையில் வாழ்ந்துவருகின்ற குழந்தைகள் விசித்திரமான மனநிலையையும், ஆர்வங்களையும் கொண்டிருப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகத் தோன்றுகிறது.
**குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம்?**
குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்துவது, குழந்தைகளாக இருக்க விடுவது, அவர்களுக்கான உலகில் தொந்தரவின்றி அவர்களை வாழவிடுவது… இவையெல்லாம் இன்று அரிதாகி வருகின்றன. யோசித்துப் பாருங்கள். சின்னஞ்சிறிய பூவிதழ் பாதங்களுக்குப் பள்ளிகளில் மிக உயரமான படிக்கட்டுகள். பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ குழந்தைகளை மனதில் கொண்டு படிக்கட்டுகளைக் கட்ட முயற்சி எடுக்கிறோமா?
பூங்காக்களில் குழந்தைகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலில் அவர்களுக்கு என்று என்ன பாதுகாப்பு இருக்கிறது? எத்தனை இடங்களில் சறுக்கு மரத்துக்குக் கீழே முறையாக மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது?
எத்தனை உணவகங்களில் குழந்தைகளுக்கேற்ற கைகழுவும் தொட்டிகளும் குழந்தைகள் வசதியாகச் சாப்பிடுவதற்கேற்ற நாற்காலிகளும் இருக்கின்றன? பேருந்துகள், ரயில்கள் எந்த அளவுக்குக் குழந்தைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன?
**ஏன் இவ்வளவு அவசரம்?**
முன்பெல்லாம் ஐந்து வயது முடியும்வரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அது பிறகு மூன்று ஆனது. பிறகு இரண்டு ஆனது. இப்போதெல்லாம் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தியவுடன் பிளே ஸ்கூலுக்கு அனுப்பப்படுகிறது. ஏன் இவ்வளவு அவசரம்? ஏன் இவ்வளவு சிறிய வயதில் பிள்ளைகள் பெற்றோர்களை விட்டு ஏன் பிரிய வேண்டும்?. இதற்காகவா பிள்ளையைப் பெற்றெடுக்கிறார்கள்?
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள். தோளில் புத்தகச் சுமை.
விடுமுறை என்று சொன்னதும் குழந்தைகளுக்கு ஏன் அவ்வளவு உற்சாகம் வருகிறது? குழந்தைகளுக்குப் பள்ளி செல்வது என்றாலே பாகற்காயாய்க் கசப்பது ஏன்?
குழந்தைகளின் நண்பர்களாய், விளையாட்டு தோழர்களாய் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஏன் அவர்களை அந்நியப்படுத்துகிறார்கள்?
அரசு விழாக்களிலும், பள்ளி விழாக்களிலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும், மாணவர்களையும் குழந்தைகளையும் வெயிலிலும், குளிரிலும் கட்டாயப்படுத்தி நிற்கவைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
குழந்தைகள் தங்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் வெளிப்படையாகவும், அதிகப்பிரசங்கித்தனமாகவும், புத்திசாலித்தனமாகவும் கேள்விகளையும் கேட்க ஆரம்பிப்பார்கள்.
அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாகப் பதில் சொன்னால்தான், அவர்கள் உங்களிடம் தங்களை மறந்து பழகுவார்கள். புதிய தேடல்களில் ஈடுபடுவார்கள்.
**எப்போது பள்ளிக்கு அனுப்பலாம்?**
குழந்தைகளைச் சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையானதை பூர்த்தி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனையின் மனநல ஆலோசகர் ஜெயசுதா காமராஜ் விளக்குகிறார்:
“தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் குழந்தைகளை இரண்டு வயது முடிவதற்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தை அழகான கையெழுத்துடன், அதி புத்திசாலியாக வர வேண்டும் என்ற காரணத்துக்காகவும் சிறிய வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர்.
ஆனால், உளவியல் ரீதியாகப் பார்த்தால் குழந்தைகள் ஆறு வயதுக்கு மேல் பள்ளிக்குச் சென்றால் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகின்றனர். இரண்டு வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதால், குழந்தைகளுக்கு அவர்களுடைய வளர்ச்சி, அதாவது அடுத்தடுத்த நிலைக்கு அவர்கள் செல்வது தாமதமாகும். அவர்களின் விளையாட்டுத் திறன் குறைந்துவிடும். சிந்திக்கும் திறனை இழந்துவிடுவார்கள். போலியான வாழ்க்கையை வாழ்வது போன்ற உணர்வு ஏற்படும். அவர்களின், சுறுசுறுப்பும் மங்கிவிடும்.
இரண்டு வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது அவர்களின் உரிமையை மீறும் ஒரு செயல். கற்றுக்கொள்ளும் செயல் இயற்கையானது. ஆனால், அதை நாம் கட்டாயப்படுத்தி, அவர்களுடைய வயதை மீறிக் கற்றுத்தருகிறோம்” என்கிறார் ஜெயசுதா காமராஜ்.
**வளர்ப்பும் வார்ப்பும்**
13 வயது முதல் 19 வயதிலான காலகட்டம், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நிறையவே சிக்கலான காலகட்டம். குழந்தைகள் பெரியவர்களிடம் இதமான உணர்வைப் பெறும் வகையில் அவர்களுடைய அணுகுமுறை இருக்க வேண்டும்.
ஆனால், பல பெற்றோர்கள் கண்டிப்பு என்னும் பெயரில் மிகவும் கறாராக நடந்துகொள்வது, வேலைப் பளுவைக் காரணம் காட்டிக் குழந்தைகளிடம் அதிகம் பழகாமல் இருப்பது அல்லது அதீதமாய்ச் செல்லம் கொடுப்பது, அவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவர்களைக் கையாள்வது, பொறுமையிழந்து கத்துவது என்று குழந்தைகளின் வாழ்வைச் சிக்கலாக்கிவிடுகிறார்கள்.
இந்த மாதிரியான வளர்ப்பு மூலம், குழந்தைகள் சமூகத்தின் மற்ற குழந்தைகளிடமிருந்து துண்டிக்கப்படுகிறார்கள். செயற்கையாகத் திணிக்கப்படும் ஒழுக்கம் எந்த வகையிலும் பலன் தராது. தற்போது குழந்தைகள் எல்லாம் வளர்க்கப்படுவதில்லை; வார்க்கப்படுகிறார்கள்.
கல்வி, ஒழுக்கம் ஆகியவை குழந்தைகளிடத்தில் இயல்பாக வளர, மலர நாம் உதவினால் போதும் எதையும் திணிக்க வேண்டாம். கல்வி என்பது புத்தகத்தில் மட்டும் இல்லை. ஒழுக்கம் என்பது விதிமுறைகளில் மட்டும் இல்லை. குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு அவர்களிடம் அன்புடனும் பொறுமையுடனும் பொறுப்புடனும் பழகுவதுதான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கச் சிறந்த வழி. அவர்களுக்காக நீங்கள் செலவிடும் நேரம், நீங்கள் கொடுக்கக்கூடிய கோடிக்கணக்கான பணத்தைக் காட்டிலும் முக்கியமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
**வளர்க்கவே வேண்டாம்**
என்னுடைய குழந்தையை எனக்கு வளர்க்கத் தெரியாதா என்று கேள்வி எழுப்பலாம். உண்மையைச் சொல்லப் போனால், நமக்கு வளர்க்கவே தெரிய வேண்டாம். குழந்தைகள் தானாகவே நன்றாக வளரும். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல், தட்டிக்கொடுத்து ஊக்குவித்தாலே போதும். அதேபோல், நம்முடைய கெட்ட எண்ணங்கள், கெட்ட பழக்கங்கள், சூது வாது, கள்ளம், கபடம், பாரபட்சம், பாதுகாப்பின்மை ஆகிய எதிர்மறை அம்சங்கள் குழந்தைகளை அண்டவிடாமல் பார்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிள்ளை வளர்ப்பு முடிந்தது.
நம் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும். யாரிடமும் வெறுப்பை வளர்க்காமல், எல்லோருடனும் பழக அனுமதிக்க வேண்டும். சாதி மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வளர்கிறார்களா என்பதை மட்டும் உறுதி செய்தால் போதும்.
ஆசிரியர்கள், மாணவர்களை நம் குழந்தைகள் என்று நினைக்கும் மனப்பான்மை வந்தால் போதும். குழந்தைகளுக்குப் பள்ளி வாழ்க்கையும் சொர்க்கம்தான்.
தன்னுடைய பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்கலால் நேரு தெரிவித்தார். காரணம், அவர் குழந்தைகளிடம் கொண்டிருந்த அன்பு.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பல்வேறு கனவுகள் காண்கிறார்கள். என் பிள்ளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அவர்கள் நல்ல மனிதனாக வளர வேண்டும் என்று நினைப்பதில்லை.
**குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்**
“குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகளவில் இருக்கிறது. அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆறு வயது வரை அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிட வேண்டும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதெல்லாம் தவறான அணுகுமுறை” என்று மனநல ஆலோசகர் ஜெயசுதா கூறுவது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
குழந்தைகளின் அறிவு, திறமை ஆகியவற்றை அவசர அவசரமாக வளர்க்க முனைவதில் அர்த்தமில்லை. மாபெரும் அறிவியலாளர்களும் சாதனையாளர்களும் இரண்டு வயதில் பிளே ஸ்கூலுக்குப் போய் மூன்று வயதில் இரண்டு கிலோ புத்தக மூட்டையைச் சுமக்கவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
திறமை, அறிவு எல்லாம் இயல்பாக வளரும். நமது அன்பும் அரவணைப்பும் நெருக்கமும் அவர்களுக்குத் தரும் ஆழமான நன்மைகளை எந்த நூலும் எந்தப் பள்ளியும் எந்த அளவு பணமும் கொடுத்துவிட முடியாது.
“நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி மோட்ச ராஜ்ஜியத்தை எய்த முடியாது” என்றார் இயேசு பிரான். குழந்தைகளைப் போலத் தூய மனம் நமக்கு வேண்டும் என்று அவர் சொல்கிறார். நம்மால் அப்படி இருக்க முடியாவிட்டாலும் குழந்தைகளையாவது குழந்தைகளாக இருக்க விடுவோம். இதையே குழந்தைகள் தினச் சபதமாக மேற்கொள்வோம்.