இந்தியா முழுவதும் ஒரே அரசியல் சாசனம் என்பதுதான் அண்ணல் அம்பேத்கரின் நிலைப்பாடு; ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கியதை அம்பேத்கர் எதிர்த்தார் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்துள்ளார். Ambedkar BR Gavai
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தலைமை நீதிபதி பிஆர் கவாய் பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரித்தோம். நாடு ஒற்றுமையாக இருக்க நாடு முழுவதும் ஒரே அரசியல் சாசனம்தான் இருக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் நிலைப்பாடு; ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவை அம்பேத்கர் எதிர்த்தார். இதனை நினைவில் கொண்டுதான் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் அதிகப்படியான கூட்டாட்சியை கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விமர்சனங்களை எதிர்கொண்டவர் அம்பேத்கர். அப்போது, நமது அரசியல் சாசனம்தான் தேசத்தை ஒற்றுமையாக வைத்திருக்கும் என பதில் தந்தார் அம்பேத்கர். இந்தியா இப்போதும் சவால்களை எதிர்கொண்டாலும் ஒற்றுமையாக இருக்க காரணம் நமது அரசியல் சாசனம்தான். இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார்.
370-வது பிரிவு வழக்கு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டிஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த பெஞ்ச்சில் தற்போதைய தலைமை நீதிபதி பிஆர் கவாய்-ம் இடம் பெற்றிருந்தார். இந்த வழக்கில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.