ADVERTISEMENT

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் நோக்கம் இல்லை – வைகோ திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

மதிமுக, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகளை என்றைக்கும் வைக்கவே இல்லை; அப்படி கோரிக்கை வைக்கும் நோக்கமும் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வருவதால் அங்கு அதிக ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்க வரி கொடுமையிலிருந்து தப்பிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்குப் பின்புதான் வரும். அதுவரை மத்திய அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கோவை, கரூர், திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை. 11.7 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறோம் என்பவர்கள் 7 சதவீத வளர்ச்சியை அடைவோம் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

ADVERTISEMENT

மெட்ரோ திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்குக்கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது” என்றார்.

திமுக – மதிமுக கூட்டணி குறித்து பேசுகையில், “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகளை நாங்கள் என்றைக்கும் வைக்கவே இல்லை. அப்படி கோரிக்கை வைக்கும் நோக்கமும் இல்லை. திமுக நிச்சயம் தனிப்பெரும்பான்மையுடன் வென்று, மீண்டும் 2026-ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார். திராவிட மாடல் ஆட்சி தொடரும்” என்றார்.

ADVERTISEMENT

எப்ஸ்டீன் பைலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இருந்ததாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “மோடிக்கு நாட்டில் நல்ல பெயர் இல்லை” என்றார்.

திமுக மதிமுக தொகுதி பங்கீடு குறித்து பேசுகையில், “பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். தொகுதி பங்கீட்டிற்காக திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த 3 மணி நேரத்திற்குள், மதிமுக சார்பிலும் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்கள் கேட்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஒரு சிலர் தங்கள் மனதிற்குத் தோன்றியதைச் சொல்கின்றனர். ஆனால் நாங்கள் அப்படிச் சொல்ல மாட்டோம் என்று வைகோ தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share