கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய தேசியத் தலைவர்கள், “சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர்” என்று புகழாரம் சூட்டினர்.
கலைஞருக்குப் புகழ் வணக்கம் செலுத்தும் விதமாக ‘தெற்கிலிருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்னும் தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டு பேசும் நினைவஞ்சலி கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) மாலை 4 மணிக்குச் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையிலும், தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலும் தொடங்கிய இக்கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய [உரையின்](https://minnambalam.com/k/2018/08/30/104) முதல் பதிப்பை நேற்று பார்த்தோம். அதன் தொடர்ச்சி பின்வருமாறு…
**புதுவை முதல்வர், நாராயணசாமி**
கலைஞர் திமுகவில் தொண்டராக, பேச்சாளராக இருந்து தலைவரானது மட்டுமல்லாமல் முதல்வராக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக் காத்தவர். தமிழக மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து, தமிழகம் வளர வேண்டும் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் கலைஞர். தமிழகத்தில் இருக்கக் கூடிய தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்க கூடிய அனைத்துத் தமிழர்களும் போற்றக் கூடிய ஒரு தலைவர். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்களுக்கு இன்னல் விளைவிக்கப்படுகிறதோ. அப்போது கலைஞரின் குரல் ஒலித்திருக்கிறது என்பதைச் சரித்திரம் கூறிக்கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், சமுதாயத்தில் அடித்தட்டு தளத்தில் இருக்கக் கூடிய மக்களுக்காக வாழ்ந்து காட்டியவர். அவர்களுக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பாடுபட்ட ஒரு தலைவர்.
மறைந்த தலைவர் பெரியார், பேரறிஞர் அண்ணாவின் வழியிலே சமூக நீதியைக் காப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். அதுமட்டுமல்ல மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தர்மத்தை இந்த நாட்டிலே கடைப்பிடிக்க வேண்டுமென்று, இந்தியா முழுவதிலும் பறைசாற்றிய ஒரு தலைவர். குறிப்பாக இந்திய அளவிலே, 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இருந்தபோது, 69 சதவிகித இடத்தைப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கொடுத்து சரித்திரம் படைத்தவர் கலைஞர்.
**திருணமூல் காங்கிரஸ், டெரிக் ஓ பிரையன்**
(நான் பெங்காலி அல்லது இந்தியில் பேசலாம். ஆனால், இன்று நான் தமிழில் பேச ஆசைப்படுகிறேன். என் தமிழ் பேச்சில் வேறு ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்ற தன்னம்பிக்கையுடன் எனது பேச்சை தொடங்குகிறேன் என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார்)
திரிணமூல் காங்கிரஸ், அதன் தலைவர் மம்தா பானர்ஜி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கலைஞரை நேசிக்கும் பல லட்சம் மேற்கு வங்க மக்களின் சார்பாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கூட்டாட்சி தத்துவத்தை மதித்த மாபெரும் தலைவரைப் பற்றிப் பேசுவதற்குப் புதிதாகப் ஒன்றுமில்லை. கலைஞரே கூட்டாட்சி தத்துவத்தின் மன்னன். மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உலகுக்கு உரக்கச் சொன்னவர். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதுதான் கருணாநிதிக்குச் செலுத்தும் சரியான அஞ்சலி. இதை மேற்கு வங்கத்தில் செய்ய நாங்கள் தயார், இங்கு நீங்கள் தயாரா என்று திமுக தொண்டர்களிடம் முழங்கினார். பின்னர் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறி தனது உரையை முடித்தார்.
**நிதிஷ் குமார்**
கலைஞர் சமூக நீதியின் காவலர். சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர். கலைஞர் இறப்புச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். பிகாரில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆற்றல்மிகு தமிழ் இலக்கியத்தை வசனத்திலும், திரைப்படத்திலும் வெளிப்படுத்தியவர் கலைஞர். 50 ஆண்டுக்கால ஆட்சியின் தலைவராகவும், தாம் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனைப் படைத்தவர். மாநில நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு வித்திட்டார். தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
கலைஞர் மது ஒழிப்புக்கு ஆதரவானவர். ஏழைகள், மாணவர்கள் எனப் பலரும் மதுவுக்கு அடிமையாக தங்கள் உயிரை இழக்கின்றனர். இந்தப் பழக்கத்தால் குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். திமுக ஆட்சிக்கு வரும்போது, மது ஒழிப்பை அமல்படுத்தும் என்று விரும்புகிறேன். அதுபோன்று கலைஞரின் எண்ணற்ற கனவுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
**ஆம் ஆத்மி, சோம்நாத் பார்தி**
கலைஞரின் உடன்பிறப்புக்களுக்கு வணக்கம். இந்தியாவின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவர் கலைஞர். சினிமா முதல் அரசியல் வரை 80 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்காற்றிய நீண்ட பயணம் கொண்டவர் கலைஞர். சிறுபான்மையினர் உரிமைக்காக இந்திய அரசியலில் முதன்முதலில் குரல் கொடுத்தவர். பெண்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் சுயமரியாதைக்காகவும் பேசியவர் கலைஞர்.
ஆகஸ்ட் 15ஆம் சுதந்திர தினத்தில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்த அவர், தனது செயல்பாடுகள் மூலம் பாரதத் தாயின் உரிமைமிக்க மகனாக அவர் திகழ்கிறார். கலைஞர் வழியில் ஸ்டாலின் செயல்பட வேண்டுமென ஆம் ஆத்மி வாழ்த்துகிறது. கலைஞர் மறைந்த அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது வரலாற்று நிகழ்வு. கலைஞருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதற்கு ஆம் ஆத்மி ஆதரவு தருகிறது.
**சிபிஐ தேசியச் செயலாளர், டி.ராஜா**
மானுடத்தின் சமத்துவத்துக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடியவர் கலைஞர். கலைஞரின் தமிழால் தெளிவுபெற்ற ஒரு தலைமுறையைச் சார்ந்தவன் நான். கலைஞருக்கு மரணம் என்பதில்லை. கலைஞர் ஒரு சமூக நீதிப் போராளி. தமிழ் வாழ்கிற நாள் தொட்டு அவருடைய நினைவுகள் வாழும், அவருடைய வாழ்வு ஓர் அர்த்தமிக்க பாடமாகும். மெட்ராஸ் என்பதைச் சென்னை என்று பெயர் மாற்றுவதற்குக் காரணமானவர் அவர். எனவே சென்னை நகரம் இருக்கும்வரை அது கலைஞரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
**மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர், சீதாராம் யெச்சூரி**
பல்துறை வித்தகர் கலைஞர். நவீன இந்தியா, நவீன தமிழகத்தை உருவாக்கப் பாடுபட்டவர். பெரியார், அண்ணாவுடன் பணியாற்றிய அவர், சுயமரியாதை, பெண்களுக்குச் சம உரிமை, சமத்துவம், சமூக நீதி ஆகிய கொள்கைகளுக்காகப் போராடியவர்.
1975இல் அவசர நிலையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் கலைஞர். மாநிலங்களில் அறிவிக்கப்படாத அவசர நிலைதான் தற்போது நிலவி வருகிறது. இது வேதனைக்குரியது. இன்று பகுத்தறிவுக்கும் பிற்போக்கு கொள்கைகளுக்கும் இடையேதான் மோதல் நிகழ்ந்துவருகிறது. பன்முகத்தன்மையை அழிக்கும் வகையில் கல்வியில்கூட ஒரே மத சித்தாந்தத்தைப் புகுத்தும் போக்கு நடந்துவருகிறது. பன்சாரே, கல்புர்கி,கௌரி லங்கேஷ்கர் போன்றோர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். நேற்று கூட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பாகத் தமிழகம் அதனை ஏற்காது. ‘தாய்’ காவியத்தை முரசொலியின் மடல் மூலம் எழுதி மக்களுக்குத் தொடர்ந்து முற்போக்குச் சிந்தனையை வளர்த்தவர். முற்போக்கு சிந்தனை இருந்தால் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை நிலை நாட்ட முடியும். இதற்கு முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், பொருளாதார சுதந்திரம், உண்மையான ஜனநாயகம் ஆகியவற்றுக்குக் கலைஞரால் தமிழகம் எடுத்துக்காட்டாக உள்ளது. சமூக அரசியல் கலாச்சாரத்துக்கு வித்திட்டவர் கலைஞர்.
**முன்னாள் பிரதமர், தேவகௌடா**
மாநில அரசியலின் பிரகாசமான அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம் அதனை காக்க துணை நின்றவர். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். மாநிலக் கட்சிகளின் தலைசிறந்த தலைவர் அவர். திராவிட இயக்கத்தை 50 ஆண்டுகள் முன்னெடுத்துள்ளார். வி.பி.சிங் மற்றும் சமூக நீதிக்காக அவர் நின்றதை நான் நினைவுகூர விரும்புகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதியைக் காக்க போராடியவர் கலைஞர். பத்திரிகையாளர் என்பதால் ஊடக சுதந்திரத்துக்கும் அதிக மதிப்பளித்தவர். 1989இல் நாடு அரசியலில் ஸ்திரமின்மையைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது, கலைஞர் வி.பி.சிங் பக்கம் நின்றார். நான் பிரதமராகுவதற்கும் அவர் உதவி புரிந்தார். நான் டெல்லி அரசியலுக்குச் செல்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை.
கூட்டணி ஆட்சி சமயத்தில் ஸ்திரத்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. எனது அரசுடன் மட்டுமல்ல; ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசுகளுடன் தோழமையுடன் செயல்பட்டவர். இந்திய அரசியலில் 20 ஆண்டுகளுக்கு ஸ்திரத்தன்மையை அவர் வழங்கியுள்ளார். அவரது அரசியல் ஞானத்தை மறக்க முடியாது.
**காஷ்மீர் முன்னாள் முதல்வர், ஃபரூக் அப்துல்லா**
எந்த மதம், எந்த இனம் எந்த மொழியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள், கலைஞர் அனைவரையும் நேசித்தார். அவரை பொறுத்தவரை அனைவரும் சகோதரர்கள்தான். கலைஞரின் அந்த மரபை ஸ்டாலினும் பின்பற்றுவார் என்று நம்புகிறேன். ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் இந்தியாவின் கூட்டாட்சியை ஊக்குவிக்கவும் மேடையில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் தங்களை ஆட்சி செய்பவர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்திய அரசு அல்ல. ஆனால், தேசத்தில் மிகப்பெரிய பிரச்சினையை நாம் சந்தித்து வருகிறோம். மதத்தாலும் சாதியாலும் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். ஆங்கிலேய ஆட்சியின்போது வேற்றுமைகளை மறந்து நாம் இணைந்து செயல்பட்டோம். தற்போது ஆட்சியில் உள்ளவர்களை அகற்ற வேண்டுமென்றால் நாம் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இணையாத வரையில் இந்த தேசம் வேகமாக வீழ்ச்சியைச் சந்திக்கும்.
இந்தியா முழுவதும் மின்சார மயமாகியுள்ளது என்று ஆட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். என் மாநிலத்திற்கு, என் கிராமத்திற்கு வந்து பாருங்கள் உண்மை தெரியும். கலைஞரை நாம் உண்மையில் நினைவுகூர வேண்டுமென்றால் தேசத்தின் நலனுக்காகப் போராட வேண்டும். ஆனால், அது எளிதானது அல்ல. ஊடகங்கள் அவர்களுக்கு (மத்திய அரசு) ஆதரவாக உள்ளன. ஸ்டாலினுக்குக் கடுமையான பணிகள் காத்திருக்கிறது. பாரிய அழிவுக்குப் பின்னர் ஹிட்லர் இறந்துபோனார், முசோலினி இறந்துபோனார். அவர்களை யாரும் நினைவுகூர்வதில்லை. அதுபோலவே, தற்போதைய சர்வாதிகாரர்களும் அழிந்துபோவார்கள். நாம் அனைவரும் இணைந்து பாசிச சக்திகளுக்கு எதிராக போரிடுவோம்.
**காங்கிரஸ் மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத்**
திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துகள். தலைமைப் பண்புக்கு தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர் கலைஞர். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டார். கலைஞருக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் அது எழுத்து எழுத்து எழுத்து… எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா எனத் திகழ்ந்து கலைஞர் என்ற பெயரைப் பெற்ற கலைஞர், அனைத்திலும் சாதனை படைத்தவர்.
இந்திரா காந்தியை மீண்டும் பிரதமராக்க 1980இல் கூட்டணி அமைந்தது. காங்கிரஸும் திமுகவும் கூட்டணி அமைப்பதற்கு சஞ்சய் காந்தியுடன் கலைஞரைச் சந்தித்த நினைவுகள் தற்போது வருகின்றன. கலைஞரின் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்துள்ளேன். எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அளித்தவர்.
பெரியார், அண்ணா வழியில் தமிழகத்தை வடிவமைத்தவர் கலைஞர். பல்வேறு துறைகளில் முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்ததில் நாட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் கலைஞர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டியவர். மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே இஸ்லாமியர்களுக்கு முதலாவதாய் இட ஒதுக்கீடு அளித்த பெருமை கலைஞரையே சாரும். உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். இந்திய வரலாற்றில் 60களில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டிலும் முதலமைச்சராக இருந்து தடம் பதித்தவர் கலைஞர். கை ரிக்ஷாவை ஒழித்தது, குடிநீர் வாரியம், உழவர் சந்தை எனப் பல்வேறு சமூக நலத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்.
எளிமையையும் நேர்மையையும் கலைஞர் என்றும் கடைப்பிடித்தவராக இருந்தார். திராவிட இயக்க சித்தாந்த கொள்கைகள் மற்றும் சமூக நீதிக் கொள்கைகளில் ஒருபோதும் பின்வாங்காமல் இருந்தார். பாஜக கூட்டணியில் இருந்தபோதும் கொள்கை பிடிப்புடன் இருந்தவர். மத்தியில் இரு கட்சிகளின் ஆட்சிகளையும் ஆதரித்த போதிலும் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர்.
ஊடகங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மசோதாவும் பணத்தை குறிவைத்தே தாக்கல் செய்யப்படுகின்றன. மக்களவையில் பலம் இருந்தும் மாநிலங்களவையில் பலம் இல்லாததால் மரபுகளை மீறி மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றுகிறது. அவசர நிலையைவிட தற்போது நாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இவ்வாறு பேசினர்.
இறுதியாக தென்சென்னை திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியம் நன்றி கூறினார்.,”