இரவில் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்குகிறீர்களா… மக்களே உஷார்!

Published On:

| By Kavi

Zomato employee enter woman house at night

சென்னையில் நள்ளிரவில்  தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார். Zomato employee enter woman house at night

வெயில் காலம் என்பதால்  கிராமப்புறங்களில் வீட்டுக்கு வெளியே கயிறு கட்டில் போட்டு உறங்குவதையும், நகர்புறங்களில் கதவை திறந்து வைத்து உறங்குவதையும் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்தநிலையில், சென்னையில் நேற்று (ஏப்ரல் 4) நள்ளிரவு ஒரு திக் திக் சம்பவம் நடந்துள்ளது. 

சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு தம்பதியினர், வீட்டை தாழ்ப்பாள் போடாமல் உறங்கியுள்ளனர். கணவர் ஒரு அறையிலும், அவரது மனைவியும், மூன்று வயது குழந்தையும் ஒரு அறையிலும் தூங்கியதாக தகவல்கள் வருகின்றன. 

இந்நிலையில் இரவு 2.30 மணியளவில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி போய் அந்த பெண் எழுந்து பார்த்த போது சொமேட்டோ நிறுவன உடையுடன் ஒருவர் இவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த பெண் எழுந்ததை அறிந்ததும் உடனடியே அங்கிருந்து வெளியே ஓடி வந்த அந்த ஊழியர், வெளியில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டுள்ளார். 

இந்தசூழலில் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் வந்த அக்கம் பக்கத்தினர், அந்த ஊழியரை விடாமல் தங்களது வாகனத்தில் துரத்தினர். 

மத்திய கைலாஷ் காந்தி மண்டபம் சாலை வழியாக துரத்திச் சென்றனர். ஆனால் அந்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர், திடீரென ராஜீவ்காந்தி சாலையில் தரமணி நோக்கி வேகமெடுத்தார். அவரை அந்த பகுதி மக்கள் விடாமல் துரத்தினர்.  இறுதியாக  தரமணியில் மடக்கி பிடித்து இழுத்து வந்து கோட்டூர்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் தரமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. சொமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். 

ஏற்கனவே சின்ன மலை பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, அப்பகுதி மக்களிடம் தர்ம அடி வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

“கோட்டூர்புரம் பகுதியில், இரவு வீடு புகுந்து பெண்ணை புகைப்படம் எடுத்து அவரது செல்போனை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த நபர் வேறு எங்காவது இதுபோன்று குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறாரா என விசாரித்து வருகின்றனர். Zomato employee enter woman house at night

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share