சென்னை:
சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை நியமனங்கள் குறித்து அடுக்கடுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். “சுமார் 1.75 லட்சம் பணியாளர்களைக் கொண்ட பிரம்மாண்டமான துறை நம்முடையது. வரலாற்றிலேயே முதல்முறையாக, ‘ஜீரோ வேகன்சி’ (Zero Vacancy) என்ற நிலையை எட்டியுள்ளோம். தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமல்ல, 2026ஆம் ஆண்டு ஓய்வு பெறப்போகும் மருத்துவர்கள் மற்றும் மேற்படிப்புக்காகச் செல்லவிருக்கும் 700 மருத்துவர்களின் பணியிடங்களையும் முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கான ஆட்களையும் தேர்வு செய்துவிட்டோம்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.
MRB மூலம் நியமனம்:
குறிப்பாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் வரும் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
“தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாகப் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் மருத்துவத்துறையில் ஒரு சிறிய இடைவெளி கூட இருக்காது,” என்பது அமைச்சரின் வாதம்.
வெளிப்படையான கலந்தாய்வு:
கடந்த காலங்களில் இடமாறுதல் என்பது சிபாரிசு மற்றும் லஞ்சம் புரளும் இடமாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததுண்டு. ஆனால், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை 47,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்திற்கு, வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு இமாலய சாதனை,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சங்கங்களின் எதிர்ப்பு என்ன?
அமைச்சரின் இந்த ‘ஜீரோ வேகன்சி’ கணக்கை அரசு மருத்துவர் சங்கங்கள் முழுமையாக ஏற்கவில்லை. அவர்களின் வாதம் வேறாக இருக்கிறது.
பணி இடமாற்றம் (Redeployment):
“புதிதாகத் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை போன்ற உயர் சிறப்பு மருத்துவமனைகளுக்கு, புதிய பணியிடங்களை (New Posts) உருவாக்காமல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் இருந்துதான் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தூக்கிப் போடுகிறார்கள். இதனால் பழைய மருத்துவமனைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, பணிச்சுமை அதிகரிக்கிறது. இதை எப்படி காலிப்பணியிடமே இல்லை என்று சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நோயாளி – மருத்துவர் விகிதம்:
மக்கள் தொகைக்கு ஏற்பவும், நோயாளிகளின் வருகைக்கு ஏற்பவும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
புயல் முன்னெச்சரிக்கை:
இதனிடையே, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள 11,333 மருத்துவக் கட்டமைப்புகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையே இல்லை என்று அமைச்சர் சொல்வதும், இல்லை… ஆட்களை இங்கிருந்து அங்கு மாற்றுகிறார்கள் என்று சங்கங்கள் சொல்வதும் மருத்துவத்துறையில் தொடர் விவாதப் பொருளாக மாறியுள்ளது
