“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என உண்மையில் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். zelensky ready to resign.. but
நேட்டோவில் உறுப்பினராக ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் விரும்பியது. ஆனால் அதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்த நிலையில், உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு இதே நாளில் (பிப்ரவரி 24) ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகாலமாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வாரம் சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இதில் உக்ரேனிய மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் அழைக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெலன்ஸ்கி ஒரு சர்வாதிகாரி – டிரம்ப் zelensky ready to resign.. but
இந்த சந்திப்பிற்கு பிறகு சமீபத்தில் பேசிய டிரம்ப், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். ஆனால் ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடினார்.
அவர், ”ஜெலன்ஸ்கி ஒரு சர்வாதிகாரி. போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் அவர் இருக்க வேண்டிய தேவை இல்லை. அவரது பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப் போவதில்லை” என்றும், உக்ரைன் தான் போரைத் தொடங்கியதாகவும், ஜெலன்ஸ்கி உள்நாட்டில் செல்வாக்கற்றவர் என்றும் கூறினார்.
இந்நிலையில் போர் தொடங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கியேவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜெலன்ஸ்கியின் நிபந்தனை! zelensky ready to resign.. but
அப்போது அவர், “உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் உண்மையில் விரும்பினால், நான் பதவி விலகுகிறேன்.
ஆனால் எனது நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் உடனடியாக நான் இதை செய்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்.
உக்ரைன் நேட்டோவில் அனுமதிக்கப்படாவிட்டால், பொருளாதார பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் மற்றும் 800,000 பேர் கொண்ட உக்ரைனிய இராணுவத்தின் நிதியுதவி உள்ளிட்ட மாற்று பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம்.
மேலும், நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சில விஷயங்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவரது கருத்துகளால் நான் புண்படவில்லை. உக்ரைனில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தவுடன் தேர்தல்களில் எனது புகழைச் சோதிக்கத் தயாராக இருக்கிறேன்.
முதலில் உக்ரைனின் நிலைப்பாட்டை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, அவர் ரஷ்யாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தனம் செய்யும் நபராக மட்டும் ட்ரம்ப் இருக்கக்கூடாது.
500 பில்லியன் டாலர் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்திற்கு அடிபணிய நாங்கள் தயாராக இல்லை. 10 தலைமுறை உக்ரேனியர்கள் பின்னர் செலுத்தப் போகும் ஒன்றில் நான் கையெழுத்திடப் போவதில்லை” என்று ஜெலன்ஸ்கி உறுதியாக தெரிவித்துள்ளார்.