காவல்துறையின் கவனக்குறைவால் தான் என் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார் என உயிரிழந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் மகன் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். Zakir Hussain’s son seek justice for his father death
நெல்லை டவுன் பகுதியில் நிலம் பிரச்னை காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிசிலி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி, தச்சநல்லூர் பால் கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர் ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஜாகீர் உசேன் மகன் இச்சூர் ரகுமான் தனது தந்தையின் மரணத்தையடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
புகாரளித்த என் தந்தை மீது வழக்குப்பதிவு!
மேலும் இந்த கொலை தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “என் தந்தை உயிருடன் இருக்கும் வரை போராடினார். அவர் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் போலீசாரின் அலட்சியம்தான். கடந்த மார்ச் 9 ஆம் தேதி எனது தந்தை தான் முதலில் கொலை மிரட்டல் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அப்போது அவர் மீது எதிர்த்தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் பிசிஆர் வழக்குப்பதிவு செய்தனர்.
இஸ்லாம் சமூகத்திற்கு மாறிய நபர் பிசிஆர் வழக்கு கொடுத்துள்ளதாகக் காவல் ஆய்வாளர், உதவி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு என எங்கள் தரப்பு நியாயத்தை வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டது. இது எதுவுமே இப்போது நடக்கவில்லை. அதற்கு ஆதாரமாக முகநூல் பக்கத்தில் என் தந்தை வெளியிட்ட வீடியோக்களே உள்ளது.
பிசிஆர் வழக்குப்பதிவு செய்து 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நாங்களே அனைத்து ஆவணங்களும் கொடுத்தும் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
நீதி வாங்கித் தாங்க! Zakir Hussain’s son seek justice for his father death
தற்போதைய முதலமைச்சர், துணை முதலமைச்சராக இருந்த போது எனது தந்தை துணை முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்தார்.
காவல் துறையில் பணி செய்தவர் எனது தந்தை. ஆனால் அந்த வேலையெல்லாம் வேண்டாம் என விருப்ப ஓய்வு பெற்று, லாரி ஓட்டினார். தன்னை கொலை செய்யப் போகிறார்கள் எனத் தெரிந்து பல பதிவுகளை சமூக வலைத்தளங்களில் செய்துள்ளார். அப்போதெல்லாம் யாரும் தனது தந்தை பதிவுக்கு உதவி செய்யவில்லை.
இப்போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். என் தந்தையின் கொலைக்கு நீதிக் கேட்டு நிற்கிறேன். உங்களுக்கு மாசம் 1 லட்சம் என 12 லட்சம் வேண்டுமானாலும் செக் போட்டு கொடுக்கிறேன். அது பாஜகவாக இருந்தால் கூட பரவாயில்லை. எங்களுக்கு நியாயம் வாங்கி கொடுங்கள்.
வழக்குப்பதிவு செய்யக் கூட லஞ்சம்! Zakir Hussain’s son seek justice for his father death
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட புதிதாகக் காவல் உதவி ஆணையாளர் பதவி ஏற்ற பின்னும் கூடப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் இருந்த காவல் துறை சார்ந்தவரையே கொலை செய்கிறார்கள் என்றால் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீரழிந்து இருக்கிறது.
வழக்குப்பதிவு செய்யக் கூட லஞ்சம் கேட்கிறார்கள். இது குறித்து உதவி ஆணையாளர் ஒருவர் பேசும் அலைபேசி உரையாடல் அனைத்தும் எங்களிடம் ஆதாரமாக உள்ளது.
இது குறித்து நான் தற்போது அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறேன். என்னுடன் போராட வாருங்கள். எனது தந்தை கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மதச்சாயம் பூச வேண்டாம்” என வீடியோவில் ஜாகிர் உசேன் மகன் இச்சூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.