இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டெஸ்ட் போட்டிகளை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற இந்திய அணி இதுவரை முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினர் பந்துவீச்சின்போது நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலங்கை அணியால் பந்து வீச முடியவில்லை. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இலங்கை அணியின் மீது இதே குற்றச்சாட்டு இருந்தது. மூன்று மாதங்களுக்குள் இருமுறை இவ்வாறு நடந்ததால் அணியின் கேப்டன் உபுல் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இன்னொரு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 33-வது ஓவரில் மகேந்திர சிங் தோனி அடித்த பந்தை குணதிலகா பாய்ந்து பிடிக்க முயன்றார். அப்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருக்கும் (ஆகஸ்டு 27) 3ஆவது ஒருநாள் போட்டியில் தரங்கா, குணதிலகா ஆகியோருக்குப் பதிலாக தினேஷ் சன்டிமால், திரிமன்னே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தரங்காவிற்குப் பதிலாக சமரா கபுகேதரா கேப்டனாக பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தினேஷ் சன்டிமால் அனுபவம் உள்ளவர் என்பதால் இலங்கை அணியின் வெற்றிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









