தமிழரின் வீர விளையாட்டான கபடி போட்டிகளுக்கு எப்போதும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அதன்படி நடைபெற்று வரும் ஐந்தாவது புரோ கபடி லீக்கில் (pro kabaddi) நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற தமிழ் தலைவாஸ் அணியின் போட்டியைப் பல்வேறு ரசிகர்களும் கண்டுகளித்தனர்.
நேற்று நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி த்ரில் தோல்வியைத் தழுவியது. போட்டி தொடங்கியது முதல் சிறப்பாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் அணி முதல் பாதி முடியும்போது 23 புள்ளிகளை பெற்று வலுவான நிலையில் இருந்தது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 8 பாயின்ட்களை மட்டுமே பெற்றிருந்ததால் பெரும்பாலான ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
காத்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் பாதியில் வாய்ப்பினை தவறவிட்ட தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர், இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி புள்ளிகளை அதிகரிக்க செய்தார். அதன்பின்னர் சிறப்பாக டேக்கிள் செய்துவந்த தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள், பெங்களூரு அணி வீரர்களை புள்ளிகள் பெறமுடியாமல் தடுத்து வந்தனர். ஒருபுறம் சீராக ரைடு பாய்ன்ட்டுகளை குவித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி, ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணி 32-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணியின் பிரபஞ்சன் மற்றும் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் தலா 6 புள்ளிகளை பெற்றனர். போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தாலும், அடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
�,”