தன்னிலிருந்து தொடங்கும் மாற்றம்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

எந்தவொரு செயலையும் புதிதாகத் தொடங்கும்போது, நம் காலடியின் அடியிலிருந்து தொடங்க வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. “என்ன விஷயமா இருந்தாலும் முதல்ல நீரு செய்யுவே.. அப்புறம் மத்தவஞ் செய்வான்” என்று நெல்லை மண்ணின் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். யாரோ ஒரு நபர் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், ஊரே சம்பந்தப்பட்ட பொதுப்பிரச்சினையாக இருந்தாலும், செயல்பாடு என்பது அதனை முன்வைப்பவரிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால், பேச்சும் செயலும் எதிரெதிர் திசையில் இருப்பதுதான் வெற்றிகரமான வாழ்வுக்கு அடிப்படை என்ற தவறான எண்ணம் இன்று பலரிடையே உள்ளது.

இதனை மாற்றும் விஷயத்தில் நமக்கெல்லாம் முன்னோடியாக ஒருவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர், மகாத்மா காந்தி. அவரது எண்ணத்தில், செயல்பாடுகளில், கோட்பாடுகளில், தேர்ந்தெடுத்த அர்சியல் பயணத்தில், ஏன் அவரது வாழ்க்கை முறையிலும்கூட நம்மில் பலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தான் முன்மொழியவந்த விஷயங்களைத் தன்னிலிருந்தே தொடங்கியவர் காந்தி. இதனை, அவரது அரசியல் எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள்.

ADVERTISEMENT

அந்நிய ஆடைகளைப் புறக்கணித்துக் கதராடையை உடுத்துங்கள் என்று அவர் மற்றவர்களிடம் அறிவுறுத்தவில்லை. இடுப்பில் கதர் ஆடையை அவர் சுற்றிக்கொண்டபோது, ஒரு கூட்டம் வெளிநாட்டுத் துணிகளைத் தீக்கு இரையாக்கியது. கழிவறை சுத்தம் முதல் அரசியல் நகர்வுப் பணிகள் வரை, தன்னால் செய்யக்கூடிய அனைத்தையும் அவரே மேற்கொண்டார். தனது வார்த்தைகளை யாரோ ஒருவர் செயல்படுத்தட்டும் என அவர் ஒருநாளும் வேடிக்கை பார்த்ததில்லை.

சத்திய சோதனைக்குத் தயாராக இல்லாவிட்டாலும், ஒரு சிறு சோதனையை நாம் பரீட்சித்துப் பார்க்கலாம். தமிழ் பாரம்பரியப்படி வேட்டிதான் கட்ட வேண்டும் என்கிறீர்களா? துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறீர்களா? மனிதன் பிறரைக் குறை கூறாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்களா? உள்ளும் புறமும் ஒருவர் முழுமையாக மாறப் பல யோசனைகள் என்னுள் ஓராயிரம் இருக்கின்றன என்று பொருமுகிறீர்களா? அவற்றைக் காது கொடுத்துக் கேட்க யாருமில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.

ADVERTISEMENT

கவலை வேண்டாம். கண்ணாடியைப் பார்த்து ஒருமுறை நீங்கள் விரும்புபவற்றைச் சொல்லிப் பாருங்கள். அவற்றில் எவற்றையெல்லாம் நீங்கள் பின்பற்றுகிறீர்களோ, அதேபோலப் பிறரும் அதனைச் செயல்படுத்திக் காட்டத் தயாராக இருப்பார்கள். தாகத்தோடு இருக்க வேண்டுமென்று பெருங்கும்பலுக்குப் போதித்துவிட்டு, பொய்கையில் மூழ்கிக் கிடந்ததெல்லாம் பழங்கதையாகட்டும். ஒரு சொல்லை எளிதாக அர்த்தப்படுத்தும் வழி அதனைச் செயல்படுத்துவதுதான்.

வாருங்கள், சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்!

ADVERTISEMENT

**- பா.உதய்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share