முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தமிழில் குறும்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி. இவரது வாழ்க்கை வரலாறு ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாகி வசூலைக் குவித்தது. அப்போது இப்படம் குறித்துப் பேசிய அவர், “இது என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே” என்று தெரிவித்திருந்தார். தற்போது அவர் கேப்டன் பதவியில் இல்லாதபோதும் அவரது ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த நான், எமன் படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குநர் ஜீவா சங்கர் அவரை வைத்துப் படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து கேட்ச்நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது விளையாட்டு பின்னணியிலான படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன் ஆடம் என்ற செயலி, இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறும்படத்தில்தான் தோனி நடிக்க உள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டைத் தாண்டி விளம்பரங்களில் நடித்துவரும் தோனி தற்போது கோலிவுட்டில் கால் பதிக்கவிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.,”
