கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது எனக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு சுமார் 12,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கலந்தாய்வில் தொழிற்பிரிவு மற்றும் சிறப்புப்பிரிவினர் பங்கேற்கின்றனர். ஜூலை 25ஆம் தேதி பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் கலையியல் பிரிவுக்கும், ஜூலை 26ஆம் தேதி பிடெக் (உணவுத் தொழில்நுட்பம், கோழி மற்றும் பால்வளத் தொழில்நுட்பம்) ஆகிய பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வுக்கான, தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்பு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையத்தில் உள்ளது. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை http://www.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லையில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவம், ஏஹெச் எனப்படும் கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்கள் உள்ளன. மேலும் பி.டெக்., உணவு தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 40 இடங்களும், கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 40 இடங்களும், பி.டெக் பால்வள தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 20 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 460 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
