கர்நாடகத்தில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் கூடுதலாக நாகராஜும், சுதாகர் ராவ்வும் ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் நாகராஜை நேற்று (ஜூலை 13) சந்தித்து பேசினார். அதன் பின் முதல்வர் குமாரசாமியும் நாகராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், “நானும், சுதாகரும் எங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தோம். காலை முதல் அனைத்து தலைவர்களும் நான் காங்கிரஸிலேயே இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். நான் காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன்.
சூழ்நிலை காரணமாக நாங்கள் இருவரும் ராஜினாமா செய்தோம். ஆனால் சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் எங்களிடம் வந்து ராஜினாமாவை திரும்ப பெறும்படி கோரிக்கை விடுத்தனர். நான் சுதாகர் ராவ்வுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். நானும் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளை செலவழித்தவன்தான்” என்று தெரிவித்தார். நாகராஜை தொடர்ந்து சுதாகரும் ராஜினாமாவை திரும்பப் பெறுவார் என்று சித்தராமைய்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, “என்னால் சுதாகருடன் பேச முடியவில்லை. அவரும் திரும்ப வருவார் என்று நம்புகிறேன். அவரும் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவார். அனைத்து எம்.எல்.ஏக்களையும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் திரும்பிவிடுவார்கள். நாங்கள் ராமலிங்க ரெட்டியுடனும் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே சபாநாயகருக்கு எதிராக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஜூலை 16ஆம் தேதி வரை எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஆனந்த் சிங், கே.சுதாகர், நாகராஜு, முனிரத்னா, ரோஷன் பைக் ஆகிய ஐந்து எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், தங்களது ராஜினாமாக்களை ஏற்கும்படியும், தங்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது எனவும் சபாநாயகருக்கு உத்தரவிடும்படி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**





