ADVERTISEMENT

கஜா: வேதாரண்யத்தில் ஆளுநர் ஆய்வு!

Published On:

| By Balaji

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறாவது நாளாக இன்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். பல இடங்களில் அமைச்சர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றன. இதற்கிடையே புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் நேற்று பார்வையிட்டார்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட பகுதிகளை 21, 22 ஆகிய தேதிகளில் ஆளுநர் பார்வையிட முடிவு செய்திருந்தார். ஆளுநருக்கு முன்னதாகவே பார்வையிட வேண்டும் என்பதற்காக முதல்வர் நேற்று ஆய்வு செய்துவிட்டு சென்றதை நேற்றைய [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2018/11/20/104) நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு இன்று (நவம்பர் 21) அதிகாலை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார். பின்னர் காலை 9.30 மணியளவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யத்திற்குச் சென்ற ஆளுநர், அங்கு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். வெள்ளப்பாளையம், கச்சவெளி, பள்ளிக்காடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த ஆளுநர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பிறகு மகாராஜபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உணவு, சுகாதாரமான குடிநீர் கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். அவரிடம் மக்கள், வீடு, உடமை உள்ளிட்டவற்றை இழந்து தாங்கள் தவிப்பதாகவும், அடிப்படை வசதிகளை செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். சந்திப்பின்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

இன்று நாகை மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்யும் ஆளுநர், திருத்துறைப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு திருவாரூர் செல்கிறார். இன்று இரவு திருவாரூரில் தங்கும் அவர், நாளை தஞ்சை மாவட்டப் பகுதிகளை ஆய்வு செய்கிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share