இந்துக்களின் புனிதத்தலமான தர்கா!

Published On:

| By Balaji

மதரா

பழைய சென்னைக்குள் ஒரு பயணம் – 12

மதங்களை வைத்து அரசியல் நடத்துபவர்கள் ராயபுரம் பக்கம் வந்தால் சற்று திகைத்துப் போவர். இங்குள்ள குணங்குடி மஸ்தான் தர்காவிற்கு முஸ்லீம்களை விட இந்துக்கள் அதிகம் வருவது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். 236 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்தத் தர்கா ராயபுரம், தண்டையார் பேட்டைப் பகுதியின் அடையாளமாக மாறியுள்ளது.

இந்தத் தர்கா எப்போது உருவானது, குணங்குடி மஸ்தான் என்பவர் யார் எனப் பல கேள்விகள் குறித்து வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸிடம் கேட்டறிந்தோம். 1792ஆம் ஆண்டு தொண்டிக்கு அருகில் உள்ள குணங்குடி என்ற ஊரில் பிறந்தவர் குணங்குடி மஸ்தான். இவரது இயற்பெயர் அப்துல் காதர். தாய் பாத்திமா, தந்தை நயினார் முகமது. தொண்டியில் இருந்து வந்ததால் தொண்டியார் எனவும் அழைத்துள்ளனர். இங்கு வந்து தங்கியதால் இந்த இடம் தொண்டியார் பேட்டை என்றானது. ஆங்கிலேயர்கள் தண்டியார் பேட் என உச்சரிக்க இந்தப் பகுதியின் பெயர் தண்டையார் பேட்டை என்று மாறியுள்ளது.

ADVERTISEMENT

மஸ்தான் என்பது மஸ்து என்ற பெயரில் இருந்து வருகிறது. மஸ்து என்றால் போதை. சூஃபி நெறி மேல் நாட்டம் கொண்டவர் இவர். சூஃபி நெறியும் பக்தி மார்க்கமும் அத்வைதம் பற்றியே பேசுகின்றன. ஜீவாத்மா பரமாத்மாவை காதல், அன்பு மூலமாகவே அடையமுடியும் என்பதையே இரு நெறிகளும் வலியுறுத்துகின்றன. இதனாலே இந்தத் தர்காவுக்கு 80 சதவீதம் இந்துக்கள் வருகின்றனர்.

இளவயதிலே இவரது மாமா கட்டை சாகிபுவின் மகள் மைமுனாவை திருமணம் செய்து வைக்கக் குடும்பத்தினர் முயல்கின்றனர். ஆனால் திருமண நாட்டம் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். கீழக்கரை தர்காவிற்குச் சென்று ஓரிரு ஆண்டுகள் தங்கி சேவகம் செய்தார். அதன்பின் சன்னியாசியாக முடிவெடுத்து திருச்சி கதிரியா தர்கா சென்று சாம் அலியை சந்தித்து அவரிடம் தீக்‌ஷை பெறுகிறார்.

ADVERTISEMENT

கல்லும் முள்ளும் மரங்களும் பாறைகளும் நிறைந்த பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். சதுரகிரி, நாகமலை, புறாமலை ஆகிய இடங்களில் ஐந்தாறு ஆண்டுகள் சுற்றிவிட்டு இறுதியாக அவர் சென்று சேர்ந்த இடம் தான் ராயபுரத்தில் இப்போது தர்கா இருக்கும் இடம். பாவா லெப்பை என்பவருக்குச் சொந்தமான முட்புதரும் சப்பாத்தி கள்ளியும் நிறைந்த இந்தப் பகுதி காவான் தோப்பு என அழைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நிஷ்டை புரிய உட்கார்ந்த அவர் மூன்று ஆண்டுகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின் தொண்டி சென்று தன் உறவினர்களைப் பார்த்து திரும்பியுள்ளார்.

நாகூர் தர்காவில் இவர் பாடியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இவர் நாகூர் போகும் போது இரவு நேரம் ஆகிவிடத் தர்கா பூட்டப்பட்டுள்ளது. அதனால் வெளியே நின்று இறைவனைத் துதித்து சத்தமாகப் பாடியுள்ளார். இவரது பாடலைக் கேட்டு கதவு திறக்கப்பட்டு இறைவன் முன் தோன்றியதாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரம் பாடல்கள் வரை குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார். நிராமயக்கண்ணி, அகத்தீசர் சதகம், மனோன்மணிக் கண்ணி, நந்தீசர் சதகம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

ADVERTISEMENT

தொண்டையார் பேட்டையில் இருந்த போது ஆற்காடு நவாப் இவரைக் காண வேண்டி அழைத்த போது மூர் தெருவில் உள்ள மாமூர் மசூதியில் சந்தித்து பின் தொழுகை நடத்தியுள்ளார். திரும்பி வரும் போது அவரைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல நவாப் உத்தரவிட்டுள்ளார்.

நிஷ்டை புரிவதற்காக பாவா லெப்பை குணங்குடி மஸ்தானுக்கு ஒரு தர்கா அமைத்துக் கொடுக்கிறார். அங்கு 1838ஆம் ஆண்டு தனது 47ஆவது வயதில் மறைந்தார். மஸ்தான் இறக்கும் தருவாயில் பாவா லெப்பையின் கனவில் மரத்தடியில் மஸ்தான் நிஷ்டை புரிவது தெரிந்துள்ளது. அவரது உருவம் வெள்ளை உடை அணிந்திருந்தது. இஸ்லாமியர்கள் மரணத்தின் போது அணிந்திருக்கும் ஆடையை அவர் உடுத்தியிருந்தார். அப்போது சந்தன மணம் வீசியுள்ளது. இதனாலே இங்கே வருபவர்களுக்குச் சந்தனம் கொடுக்கப்படுகிறது. அலங்காரத்திற்குத் துளசி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு பழனி கோவிலிலிருந்து வரவழைக்கப்பட்ட விபூதி வழங்கப்படுகிறது. இந்துக்களின் புனிதத்தலமாக தர்கா விளங்குவது நம் நாட்டில் ஆச்சர்யமானது மட்டுமல்லாமல் அதிசயமானதும் கூட.

*(குணங்குடி மஸ்தான் தர்கா குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய காணொளியைக் காண கிழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்)*

[இந்துக்களின் புனிதத்தலமான தர்கா!](https://www.youtube.com/watch?v=R-fIw0SeEss&feature=youtu.be)

[பழைய சென்னைக்குள் ஒரு பயணம்- முன்னோட்டம்](https://minnambalam.com/k/2018/08/22/110)

[முன்னோட்டம்- காணொளி](https://www.youtube.com/watch?v=i6SEarF-x2s)

[ராயபுரம் ரயில் நிலையம்](https://minnambalam.com/k/2018/08/23/86)

[ராயபுரம்: இந்த பெயர் வந்தது எப்படி?](https://minnambalam.com/k/2018/08/24/87)

[மனிதம் போற்றும் ரெய்னி மருத்துவமனை!](https://minnambalam.com/k/2018/08/25/74)

[ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட்!](https://minnambalam.com/k/2018/08/26/87)

[திமுக: அடிக்கல் நாட்டப்பட்ட இடம்!](https://www.youtube.com/watch?v=FHdd6JJFdDo&feature=youtu.be)

[மாநகரின் முதல் கருணை இல்லம்!](https://www.youtube.com/watch?v=FtEkr0YjBf8)

[முடிவை எதிர்நோக்கும் ரயில்வே பிரஸ்!](https://www.youtube.com/watch?v=ETWxxINLa78&feature=youtu.be)

[கணித மேதையை கௌரவப்படுத்தும் ராயபுரம்!](https://www.youtube.com/watch?v=wWNRy10u94A&feature=youtu.be)

[ராயபுரத்தில் விரியும் பார்சிகளின் வரலாறு!](https://www.youtube.com/watch?v=30wTNBdQtkI&feature=youtu.be)

[சென்னையில் மக்கள் பணியாற்றிய பார்சி இனப் பெண்!](https://www.youtube.com/watch?v=23cjU8cTk1I&feature=youtu.be)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share