சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு ஆட்டுக் கறி என்ற பெயரில் ஆயிரம் கிலோ நாய்க்கறி வந்ததாக தகவல்கள் பரவின. இது இறைச்சி விற்பனையாளர்களுக்கு எதிரான அரசியல் சதி என்று குற்றம் சாட்டியிருக்கிறார் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவரான தெகலன் பாகவி.
இன்று (நவம்பர் 21) பகலில் சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ஆட்டுக்கறியை நாய்க்கறி என விஷமப் பிரச்சாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மேலும் பேசிய தெகலான் பாகவி,
“கடந்த இரண்டு மூன்று தினங்களாக விற்பனைக்கு வந்த ஆட்டுக்கறியை, நாய்க்கறி என்று, எந்தவித ஆதாரமுமின்றி, சமூக வலைதளங்களில் உறுதிசெய்யப்படாமல் தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வதந்தியால் தலைநகரம் சென்னை மட்டுமின்றி, தமிழகமே ஒரு பரபரப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனால், இறைச்சி தொழில் வாழ்வாதாரத்தை நம்பி இருக்கக்கூடிய வியாபாரிகளின் நிலை மிகவும் கவலையளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
ராஜஸ்தானில் ஆடு விலை குறைவாக உள்ளதால், சென்னையில் உள்ள வியாபாரிகள் ராஜஸ்தானில் இருந்து ஆட்டுக்கறியை இறக்குமதி செய்கின்றனர். ரயில் மூலமாக சென்னைக்கு வரும் ஆட்டுக்கறி, முழுமையான பரிசோதனைக்குப் பிறகே, வந்து சேருகின்றது” என்றவர் நாய்க்கறி என்ற சந்தேகத்துக்கான காரணத்தையும் விளக்கினார்.
“ராஜஸ்தானில் காணப்படும் வெள்ளாடுகளின் வால்கள் ஒரு அடி வரை வளரக்கூடியவையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஆடுகளின் வால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இரண்டு தினங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து ஆட்டுக்கறி பார்சல்கள் வந்துள்ளது. இதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித பரிசோதனையும் செய்யாமல், நாய்க்கறி என்று கூறியுள்ளனர். இந்த வதந்தி சமூக வலைதளங்களால் பரப்பப்பட்டதால், வியாபாரிகளின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரும் சத்திட்டம் உள்ளதாக தெரிகின்றது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வதந்தி பரப்பிய அதிகாரிகள் மீது தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளத்தில் ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று வதந்தி பரப்பியவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்” என்று கோரிக்கை விடுத்தார் தெகலான் பாகவி.
மேலும், “கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை எடுத்த காரணத்தால் உயிர்பலிகள் எண்ணிக்கை உயர்வு தவிர்க்கப்பட்டது பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், புயலுக்கு பிந்தைய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதோடு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்க, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் எப்படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதேப்போன்று, ஏழு தமிழர்களும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையையும் தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும்” ” என்றும் வலியுறுத்தினார் எஸ்டிபிஐ துணைத் தலைவர்.
