சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் உட்பட ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் வீரர் சஹால் சாதனை படைத்துள்ளார். yuzvendra chahal get his 2nd hat tick in ipl
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 30) பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான ஷைக் ரஷீத் (11) மற்றும் ஆயூஷ் மாத்ரே (7) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் 2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரண் அதிரடியாக ஆடி 88 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடிய பிரெவிஸ் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 172 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்த சென்னை அணி எளிதாக 200 ரன்களை கடக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் 19வது ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் சஹாலின் இரண்டாவது பந்தில் தோனி அவுட் ஆனார்.
அதன்பின்னர் களமிறங்கிய தீப்க ஹூடா (2), அன்ஷுல் கம்போஜ் (0) மற்றும் நூர் அகமது (0) ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தி, சஹால் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார்.
இதன்மூலம் அமித் மிஸ்ரா (3) மற்றும் யுவராஜ் சிங் (2) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக சஹால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கடைசி ஓவரில் துபேவும் ஆட்டமிழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணி தரப்பில் சஹால் 4 விக்கெட்டுகளும், ஜேன்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.