கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்று இன்றுடன் (ஏப்ரல் 2) 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. yuvraj singh not include dhoni in 2011 world cup pics
அதன்மூலம் 1983ஆம் ஆண்டு வென்ற கபில்தேவுக்கு பிறகு ஐசிசி 50 ஓவர் உலக கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்தார்.
இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்களாக இடம்பெற்ற சேவாக், சச்சின் முதல் ஸ்ரீசாந்த், ஜாகீர்கான் வரை ஒவ்வொருவரும் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களின் 28 ஆண்டுகால கனவை நிறைவேற்றினர்.
எனினும் தனது புற்றுநோயின் தாக்கத்திற்கு இடையே இந்தியாவிற்காக தொடரின் அனைத்து போட்டியிலும் ஆல்ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங்கின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

அவர் பேட்டிங்கில் 9 போட்டிகளில் விளையாடி 90.50 சராசரியுடன் 362 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கி அரைசதம் (57) அடித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்து சென்றார்.
மேலும் தனது இடது கை சுழற்பந்து வீச்சால் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 31 ரன்களை வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது தொடரின் சிறப்பான பந்துவீச்சாக பதிவானது.
இப்படி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கலக்கிய யுவராஜ் தொடர்நாயகன் விருதையும் பெற்று அசத்தினார்.

இந்த நிலையில் இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்ற தினம் இன்று (ஏப்ரல் 2) நினைவுக் கூறப்படும் நிலையில், அதுகுறித்து உருக்கமாக தனது எக்ஸ் பக்கத்தில் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “ஏப்ரல் 2, 2011 — ஒரு பில்லியன் மக்களுக்காக நாங்கள் அந்த இரவில் கோப்பையை வென்றோம். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டைத் தோளில் சுமந்த ஒரு மனிதருக்காக வென்றோம்.
அந்த உலகக் கோப்பை வெறும் வெற்றி அல்ல. அது ஒரு ஜாம்பவான் சச்சினுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி. அவரைப் பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். அந்த இரவு, அவருக்குத் தகுதியான தருணத்தைக் கொடுக்க நாங்கள் விளையாடினோம்.
14 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவின் வெற்றி பெற்ற தருணம் இன்னும் எனது நெஞ்சில் கனக்கிறது. நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு இரவு அது” என்று குறிப்பிட்டு, அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
எனினும் அவர் பகிர்ந்த புகைப்படங்களில் அணியின் கேப்டனான தோனி, ஒன்றில் கூட இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
2011ஆம் ஆண்டுக்கு பிறகு தோனி குறித்து யுவராஜ் பல இடங்களில் விமர்சித்து வந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களிலும் தோனியை மறைத்து அவர் ட்விட் செய்துள்ளது விவாதப் பொருளாக மாறியது.