அழுத்தத்தில் ரிஷப் பந்த்: தோள் கொடுத்த யுவராஜ்

Published On:

| By Balaji

டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்குத் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டு வரும் நிலையில், யுவராஜ் சிங் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

நடந்த முடிந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகளில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து சொதப்பினார். தோனி இல்லாத நிலையில், ரிஷப்தான் தற்போதைய விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

தோனிக்கு மாற்றாக பந்த் இருப்பார் என மீடியாக்களும் கிரிக்கெட் போர்டும் கூறிவந்த நிலையில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால், டி20 போட்டிகளில் இவர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த சமூக வலைதளங்கள் முதற்கொண்டு இவரை வசைபாடி வந்தன. மேலும், கடுமையான விமர்சனங்களையும் பந்த் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ரிஷப் பந்த்துக்கு ஆதரவாக நேற்று (செப்டம்பர் 25) யுவராஜ் சிங் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில்…

ADVERTISEMENT

“யாராவது ரிஷப் பந்த்தின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். ரிஷப் பந்த்தின் குணாம்சத்தைப் புரிந்துகொண்டால்தான், அவரிடமிருந்து சிறப்பானவற்றைக் கொண்டுவர முடியும். அவரது குணநலன்களையும், அவரது மனோவியலையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவரை சத்தம் போடுவதோ, அடக்குவதோ எந்த விதத்திலும் ரிஷப் பந்த்துக்கு உதவுவது ஆகாது.

அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பயிற்சியாளர்கள், கேப்டன் ஆகியோர்தான் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர உதவ வேண்டும். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆகவே அவர்களுக்கு அவர்களது முன்னுரிமை என்ன என்பதை யாராவது எடுத்துக் கூற வேண்டும்.

ADVERTISEMENT

எனவே பேச வேண்டும்; பேசி சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர வேண்டுமே தவிர, சத்தம் போடுவது; அடக்கி ஒடுக்குவது ஒருபோதும் உதவப்போவதில்லை. இந்த இளம் வயதில் அயல்நாட்டில் இரண்டு டெஸ்ட் சதங்களை ரிஷப் பந்த் எடுத்துள்ளார். எனவே திறமை மிக்கவர்தான், அதில் சந்தேகமில்லை. அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி பெற வேண்டும் என்பதை மேலே உள்ளவர்கள்தான் உணர வேண்டும்” என்றார் யுவராஜ் சிங்.

இதே போல, சில நாட்களுக்கு முன், தோனி – ரிஷப் பந்த் ஒப்பீடு குறித்து யுவராஜ் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “ரிஷப் பந்த்தை தோனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமற்றது, தோனி, தோனி ஆவதற்கு நிறைய ஆண்டுகள் பிடித்தன, தோனிக்கு நெருக்கமாகச் செல்ல ரிஷப் பந்த்துக்கும் நிறைய காலம் பிடிக்கும்.தோனிக்கு மாற்று வீரரைக் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும்” எனக் கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share