சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 26) யுவன், வெங்கட் பிரபுவின் கார்களுக்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பின்னணி பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) இலங்கையில் உள்ள கொழும்பு மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மூவரும் இலங்கைக்கு சென்றனர். தொடர்ந்து பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னைக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
அதே விமானத்தில் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வந்தனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் அவர்களுடைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இருவரின் கார்களும் சென்னை விமான நிலைய ஊழியர்களால் பூட்டு போடப்பட்டு, லாக் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் லாக் செய்யப்பட்ட கார்களில், சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தனர்.
பின்னர் அங்கு வந்த ஊழியர் கார்களின் பூட்டை விடுவித்த பிறகு அங்கிருந்து இருவரும் புறப்பட்டு சென்றனர். இதற்கான காரணம் என்னவென்பது சரியாக தெரியவில்லை.
என்றாலும் சகோதரி இறந்த நிலையிலும் அமைதியாக கார்களில் அமர்ந்திருந்த யுவன் மற்றும் வெங்கட் பிரபுவின் பொறுமை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தற்போது பவதாரிணி உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டில், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த திரை பிரபலங்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதற்கு பின்னர் அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
