பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா போலவே பாகிஸ்தானுக்கு சென்று பேட்டிகள் எடுத்த தமிழக யூடியூபர் ஒருவரையும் பாகிஸ்தான் உளவாளியாக இருக்கலாம் என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஜோதி மல்ஹோத்ரா என்ற ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் குறித்த தகவல்கள்தான் அதிர வைக்கின்றன.
ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா, Travel with Jo என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இந்த யூடியூப்பில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று அதிகாரிகளை சந்தித்தது. பாகிஸ்தானுக்கு 2 முறை பயணம் செய்து அங்கும் தூதரக அதிகாரிகளை சந்தித்து பேசியது உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் படுகொலை நிகழ்ந்த பஹல்காம் பகுதிக்கும் சென்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார் ஜோதி மல்ஹோத்ரா. தற்போது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தார் ஜோதி மல்ஹோத்ரா என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஜோதி மல்ஹோத்ரா என்ன மாதிரியான தகவல்களைக் கொடுத்தார்? என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பின்னணியில்தான், ஜோதி மல்ஹோத்ரா போல தமிழகத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரும் பாகிஸ்தானுக்கு சென்று பேட்டிகளை எடுத்து தமது யூடியுப் சேனலில் பதிவிட்டிருந்தார். அவரையும் சந்தேகப் பட்டியலில் சேர்த்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
