அதர்ஸ் பட நடிகை கௌரி கிஷனிடம் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபர் ஆர்.எஸ்.கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் “அதர்ஸ்” என்ற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. முன்னதாக படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின் போது கௌரி கிஷன் உடல் எடை குறித்து அந்த படத்தின் ஹீரோ ஆதித்யா மாதவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, யூடியூபர் ஆர்.எஸ்.கார்த்திக் படத்தின் இயக்குநரிடம் அதே கேள்வியை எழுப்பினார். அப்போது கௌரி கிஷன் குறுக்கிட்டு என் உடல் எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று காட்டமாக எதிர்கேள்வி எழுப்பினார். ஆனால் தொடர்ந்து யூடியூபர் அதே கேள்வியை எழுப்பினார். இது திரைத்துறையில் சகஜம் என்பது போல் பேசினார். நான் தவறான கேள்வியைக் கேட்கவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் . குஷ்பூ, சரிதா உள்ளிட்டோர் எல்லாம் இது போன்ற கேள்விகளை எதிர்கொண்டவர்கள்தான் என்பதுபோல் மழுப்பலாக பேசினார்.
ஆனால் கௌரி கிஷன் தற்போது வரை தனது கருத்தில் உறுதியாக உள்ளார். அவரது போர்க்குரலுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கௌரி கிஷன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். இதில் சம்பந்தப்பட்ட நபரை தாக்கவோ, அவமதிக்கவோ அல்ல.. மாறாக இந்த தருணத்தை ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டு இரக்கம், உணர்வுப்பூர்வமான மரியாதை ஆகியவற்றோடு முன்னேறிச் செல்ல பயன்படுத்துவோம்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அந்த யூடியூபர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அது ஒரு ஜாலியான கேள்வியாக கேட்கப்பட்டது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கௌரி கிஷன் என்னை தாக்க வேண்டும் என்பது எண்ணம் இல்லை என்று டுவிட் போட்டுள்ளார். எனக்கும் அவர்கள் மனதை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எல்லோருமே அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், நாமும் நம் நிலையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்பதால்.. இந்த நிகழ்வால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
