சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை இன்று (மே 8) உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ஹேமச் சந்திரன் (வயது 26). ஹேமச் சந்திரனின் உடல் எடை 156 கிலோ. எனவே அவர், உடல் எடையை குறைக்க பல வகைகளில் முயற்சி செய்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடல் எடையை குறைப்பது குறித்து சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் யூடியூப்பில் பேசிய வீடியோவை பார்த்து அந்த மருத்துவரிடம் சென்றுள்ளார். ரூ.4 லட்சம் செலவில் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை சென்னை பம்மலில் உள்ள டிபி ஜெயின் மருத்துவமனையில் மேற்கொள்ளலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் அறுவை சிகிச்சை தொடங்கிய 45 நிமிடங்களில் ஹேமச் சந்திரன் உயிரிழந்து விட்டதாக பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹேமச் சந்திரனுக்கு சக்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில், அதற்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும், உடலில் மயக்க மருந்து செலுத்துவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளும் செய்யப்படவில்லை என அம்மருத்துவமனை மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்த மருத்துவமனையை சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
மேலும், அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் இல்லை என்றும், மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹேமச் சந்திரன் விவகாரத்தில் அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறப்படவில்லை என்பதும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்: குளிர்விக்க வருகிறது கோடைமழை!