புதிதாக வீடு வாங்க வேண்டும் என்பதற்காக இளம் பெண்ணிடம் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் அந்தப் பெண்ணைக் கணவர் குடும்பத்தார் விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஊட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த 27 வயதான இம்ரான் மற்றும் ஊட்டி, வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆஷிகா பர்வீன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதியன்று மாலை திடீரென வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறார் ஆஷிகா பர்வீன். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே ஆஷிகா பர்வீன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கணவர் இம்ரான் குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆஷிகா பர்வீன் இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் புகார் அளித்துள்ளனர்.
இதை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆஷிகா பர்வீனின் உடலை கூறாய்வு செய்து ,மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் உடற்கூறாய்வு அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் ஒருவித சயனைடு உட்கொண்டதால் ஏற்பட்ட விஷத்தன்மையே ஆஷிகா பர்வீனின் உயிரிழப்புக்குக் காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காபியில் சயனைடை கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்ததாக அவரின் மாமியார் யாஸ்பின், கணவர் இம்ரான், இம்ரானின் சகோதரர் முக்தார் மற்றும் சயனைடு வாங்கி கொடுத்த காலித் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலை பின்னணி குறித்து பேசியுள்ள காவல்துறையினர், “புதிதாக இடம் வாங்க வேண்டும் என்பதற்காக ஆஷிகா பர்வீனிடம் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால், மாமியார் – மருமகள் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும், மாமியார் யாஸ்பினுக்கு வேறு ஓர் ஆணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும், மருமகளுக்கு அந்த விவகாரமும் தெரியவந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். தங்க நகைகளுக்கு பாலிஷ் செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு விஷத்தை காபியில் கொடுத்து கொலை செய்திருக்கிறார். வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடியிருக்கிறார் மாமியார். இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், கொலைக்கான சயனைடு விஷத்தை ஏற்பாடு செய்து கொடுத்த காலித் என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: தலை பாரத்துக்கும் ஜலதோஷத்துக்கும் மாத்திரைகள் இல்லாத தீர்வுகள் இதோ…
டாப் 10 செய்திகள் : ஸ்டாலின் சிகாகோ பயணம் முதல் ஆவணி திருவிழா வரை!
உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்