கோவை அருகே இளம் பெண்ணை பின் தொடர்ந்த இளைஞர்களை பொதுமக்கள் துரத்தியதால் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பெரிய மந்திரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது மது போதையில் அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியிடம் ஆபாச வார்த்தைகளை பேசி அவருக்கு தொல்லை கொடுத்தனர்.
இதனால் ஊருக்குள் நுழைந்த போது பதறிய சிறுமி அப்பகுதியில் இருந்த பொது மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் இளைஞர்களை சுற்றி வளைக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இரண்டு இளைஞர்களும் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தனர். இருவரும் கிணற்றுக்குள் குதித்து தப்பி ஓட முயன்றனர். இதில் கிணற்றின் ஓரம் இருந்த மரக்கிளையில் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்ட ஊர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
அங்கு வந்த சூலூர் தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் உதவியுடன் இளைஞர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து காவல்துறையினர் மீட்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் என்பதும், கோட்டைசாமி மகன் சரண் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் காளான் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மது போதையில் சிறுமியிடம் ஆபாசவார்தையில் பேசி வம்பிழுத்தனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
