உயர் நீதிமன்ற தடையையும் மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (பிப்ரவரி 25) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். Government employees warn Stalin
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், சரண் விடுப்பு, அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமான ஊதியம், சரண் விடுப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்தது.
நேற்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அமைச்சர்கள் குழு அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், இந்த 10 அம்ச கோரிக்கைகள் குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதித்தது.

எனினும் இன்று (பிப்ரவரி 25) உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழ்நாடு முழுவதும் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முதலில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் யாருமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
சென்னையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். “தமிழக அரசே… தமிழக அரசே… மாண்புமிகு முதல்வரே… ஜாக்டோ ஜியோ பேரணியில் ஒன்றுபட்டு நிற்கின்றோம். எங்களது கோரிக்கையை… நியாயமான கோரிக்கையை… பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
“எங்களது கோரிக்கையை நிறைவேற்ற மறுத்தால் போராட்டம் தீவிரமடையும்” என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவரும், ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஆ.மாயவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதுவரை நாங்கள் பார்த்த முதல்வர்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின்தான். இன்று தமிழ்நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. நீங்கள் எங்களை ஏமாற்றினால் 2026ல் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள்” என்று காட்டமாக கூறினார்.
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், “நாங்கள் புது கோரிக்கை எதையும் வைக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக இதே கோரிக்கையைதான் வைக்கிறோம். காலதாமதம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடியாது என்று சொல்லிவிட்டார். இவர்கள் முடியாது என்று சொல்லவில்லை. என்றாலும் கூட,காலம் தாழ்த்துவதையும், முடியாது என்று சொல்வதையும் ஒரே தராசில் வைத்து பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். திட்டமிட்டப்படி எங்கள் போராட்டம் நடக்கும்… அது தீவிரமடையும்” என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தடையையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடியில் பல்வேறு அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.

திருப்பத்தூரில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய், அரசாணை 243ஐ ரத்து செய் என பதாகைகளை ஏந்தி 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் 600க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Government employees warn Stalin