விமர்சனம் : லக்கிமேன்!

Published On:

| By Kavi

ஹீரோவும் வில்லனும் நல்லவர்களே!

அதிர்ஷ்டம் என்ற சொல், இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் முக்கியப் பங்கை வகிக்கும். என்னதான் அது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும், நம்மையும் அதிர்ஷ்டத்தையும் இணைத்துப் பார்க்கும் சமூகத்தின் பார்வையை நம்மால் புரட்டிப்போட இயலாது. அப்படியொரு நிலைக்கு ஆளாகி நொந்து நூடுல்ஸ் ஆனவர்களுக்கு நம்பிக்கையூட்டும் படைப்பாக விளம்பரப்படுத்தப்படுகிறது ‘லக்கிமேன்’.

யோகிபாபு, ரேச்சல் ரெபேக்கா, வீரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை நகைச்சுவை நடிகரும் ஆர்ஜேவுமான பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரே ஒரு விஷயம், நாம் ஏன் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கான தூண்டுதலைத் தருகிறது. அது என்ன?

யார் அதிர்ஷ்டசாலி?

முருகன் (யோகிபாபு) ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தற்காலிகப் பணியாளராக இருக்கிறார். அவரது மனைவி தெய்வானை (ரேச்சல் ரெபேக்கா), ஒரு மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று ‘மாவு அரைத்து தரும்’ தொழில் செய்ய ஆசைப்படுகிறார். மகன் பள்ளியொன்றில் படித்து வருகிறார்.

மனைவிக்கு வங்கியில் கடன் கிடைக்காவிட்டாலும், மகன் பள்ளியில் நடந்த போட்டியொன்றில் பரிசு வாங்காவிட்டாலும், அதற்குத் தனது அதிர்ஷ்டமின்மையே காரணம் என்று நினைக்கிறார் முருகன். அதையும் மீறி, அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

ஆனால், அதற்குத் தேவையான பணம் மட்டும் அவர் கையில் கிடைப்பதே இல்லை. அப்படிப்பட்ட நேரங்களில், அவர் உடன் பணியாற்றும் வெங்கட் (அப்துல் லீ), பணம் கொடுத்து உதவி வருகிறார்.

ஒருநாள், முருகன் பணம் செலுத்தும் சிட்பண்ட் நிறுவனத்தில் குலுக்கல் போட்டியொன்று நடக்கிறது. அதில், அவருக்கு கார் பரிசாகக் கிடைக்கிறது. அதனை விற்றுப் பணம் பெறுவதற்குப் பதிலாக, அதையே தனது ‘அதிர்ஷ்டம்’ என்று நம்புகிறார் முருகன். காரணம், அதுவரை அவர் தனது வாழ்வில் அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை ஒருமுறை கூட கேட்டதே இல்லை. அதன் பிறகு, அவரது போக்கே மாறுகிறது.

கார் ஓட்டத் தெரியாத முருகன், மெனக்கெட்டு அதனைக் கற்றுக் கொள்கிறார். அந்த நேரத்தில், அவர் வேலை பார்த்து வரும் நிறுவனம் ஊதிய உயர்வு தந்து நிரந்தரப் பணியாளர் ஆக்குகிறது. மனைவியும் மகனும் மகிழ்ச்சியில் ஆழ்கின்றனர்.

எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் (வீரா) உடன் முருகனுக்கு மோதல் ஏற்படுகிறது. அடுத்தடுத்த சில நிகழ்வுகளில், அந்த மோதல் பெரிதாகிச் சிவகுமாரின் வேலையையே பாதிக்கும் அளவுக்குச் செல்கிறது.

தனது போலீஸ் வேலை மீது வேட்கை கொண்டு திரியும் சிவகுமாரை அந்த சம்பவம் காயப்படுத்துகிறது.  இந்த நிலையில், திடீரென்று முருகனின் கார் காணாமல் போகிறது. வேறு வழியில்லாமல், சிவகுமாரிடமே புகார் அளிக்கும் நிலைக்கு ஆளாகிறார் முருகன்.

அந்த காரைக் கடத்தியவர்கள் பணம் கேட்டு மிரட்ட, அதனைக் கொடுத்தபிறகும் கூட அந்த கார் கிடைப்பதில்லை. அதேநேரத்தில், போதை மருந்து கும்பலைச் சேர்ந்த ஒருவனிடம் அந்த காரை கைப்பற்றுகிறார் சிவகுமார். அதன் தொடர்ச்சியாக, அந்த வழக்கில் முருகனையும் சேர்க்கிறார். அதன்பிறகு மனைவியும் மகனும் முருகனை விட்டுப் பிரிந்து செல்கின்றனர்.

ஒரு சாதாரண மனிதரான முருகனால் சிவகுமார் எனும் போலீஸ் அதிகாரியை எதிர்க்க முடிந்ததா? அவர் பதிலுக்கு என்ன செய்தார் என்பதைச் சொல்கிறது ‘லக்கிமேன்’.

ஹீரோ, வில்லன் இருவருமே நல்ல குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம். அதேநேரத்தில், நாயகன் அதிர்ஷ்டசாலியா இல்லையா என்பதையும் இப்படத்தின் முடிவு தெளிவுபடுத்துகிறது. அதனை நோக்கிச் செல்லும் பொருட்டு, நாயகன் வாழும் சாதாரண வாழ்க்கையின் லாப நஷ்டங்கள் காட்சிகளாக விரிகின்றன.

பீல்குட் படம்!

சாதாரண மனிதராகத் தோன்றும் படங்களில், குணசித்திர நடிப்பில் ஸ்கோர் செய்வது யோகிபாபுவின் வழக்கம். இதிலும் அதனைத் தொடர்ந்திருக்கிறார். ஆனால், சீரியசான காட்சிகளில் ’கவுண்டர்’ அடிக்கும் பழக்கத்தை மட்டும் விட மாட்டேன் என்கிறார். ‘நெர்வஸா இருக்கு’ என்பதற்குப் பதிலாக ‘நீரவ்ஷா இருக்கு’ என்று அவர் சொல்வதை எல்லாம் இயக்குனர் கட்டுப்படுத்தாமல் விட்டது, சில இடங்களில் கதையின் ஆன்மாவைச் சிதைத்திருக்கிறது.

’குட்நைட்’ படத்திற்குப் பிறகு, இதிலும் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார் ரேச்சல் ரெபேக்கா. அவரது நடிப்பு, எண்பதுகளில் வெற்றிகரமாக உலா வந்த பல நடிகைகளை நினைவூட்டுகிறது.

இன்னொரு நாயகன் அல்லது வில்லனாக வந்திருக்கிறார் வீரா. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு முற்றிலுமாகப் பொருந்தியிருக்கிறார். ஆனால், எந்நேரமும் அவர் தாடி வைத்துக்கொண்டு சுற்றுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வீராவின் ஜோடியாக நடித்துள்ள சுஹாசினி குமரன், இரண்டொரு காட்சிகளில் வந்து அழகான நடிப்பைத் தந்துள்ளார்.

யோகிபாபுவின் நண்பனாக வரும் அப்துல், அவரது நிறுவன இயக்குனராக வரும் அமித் பார்கவ், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி என்று இன்னும் பல நடிகர்கள் இதில் உண்டு.

காட்சிகளின் தன்மை மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து கேமிரா கோணங்கள் அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜய். அதற்கேற்ப படத்தைத் தொகுத்துச் சீராக கதையோட்டம் அமைய உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.மதன்.

பழைய பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை விசாரணைக் கூண்டாகப் பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் திரைக்கதையில் சுவாரஸ்யம் ஊட்டுகின்றன. ஆனால், ‘காஸ்ட் அவே’ பாதிப்பில் ஒரு தேங்காய் நெற்றுக்கு கண், மூக்கு வரைந்து வைத்திருக்கிறது கலை இயக்குனர் சரவணன் வசந்த் குழு. ரியல் எஸ்டேட் அலுவலகம், யோகிபாபு மற்றும் வீராவின் வீடுகளைக் காட்டிய விதத்தில் கவனம் கவர்கிறது.

ஷான் ரோல்டன் இசையில் ’எதுதான் இங்க சந்தோஷம்’ பாடல், நாம் வீடு வந்த பின்னும் மனதோடு தொடர்கிறது. போலவே, ‘கதை ஒரு வரிக் கதை’, ’தொட்டு தழுவும் தென்றலே’, ’ராஜா ராஜா நாமதான் ராஜா’ பாடல்களும் நம்மை ஈர்க்கின்றன. அதே உற்சாகத்தோடு, பின்னணி இசை வழியாகக் காட்சியோடு ஒன்றிணைத்து நம்மை உருக வைக்கிறார் ஷான்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், இதனை ஒரு ‘பீல்குட் படம்’ ஆகத் தர முனைந்திருக்கிறார். அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். அதற்கேற்றவாறு நாயகன்  யோகிபாபு, அவரது மனைவி, மகன், நண்பன், வீட்டு உரிமையாளர் பாத்திரம் மட்டுமல்லாமல், போலீஸ் அதிகாரியாக வரும் வீரா, அவரது சைக்காலஜிஸ்ட் உறவினர், அவரிடம் பயிற்சி பெறும் இளம்பெண் என்று பலரை நம் மனதுக்கு அருகே உலாவ விட்டிருக்கிறார்.

சில தெளிவின்மைகள்!

அதிர்ஷ்டம் வரவே வராது என்ற அவநம்பிக்கையில் இருக்கும் ஒரு மனிதனின் கதை இது. ஆனால், தொடக்கத்தில் வரும் சில காட்சிகளைத் தாண்டி கதையில் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை இயக்குனர்.

இந்த கதையில், வீராவின் பாத்திரம் வழியே ‘நேர்மைதான் வாழ்வுக்கு முக்கியம்’ என்கிறார். அதேநேரத்தில், யோகிபாபு பாத்திரம் மூலமாக ‘சாதாரண மனிதனே சூப்பர் ஹீரோ’ என்று சொல்கிறார். உண்மையைச் சொன்னால், இவ்விரண்டு கோட்பாடுகளுக்குமான முரண் தான் இந்த திரைப்படம். அதனை அடிக்கோடிட்டுச் சொல்ல மறந்திருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.

அது நிகழ்ந்திருந்தால், மலையாளப் படமான சச்சியின் ‘டிரைவர் லைசென்ஸ்’ போன்று இதுவும் அற்புதமான அனுபவமாக மாறியிருக்கும். ’லக்கிமேன்’ இறுதிக்காட்சியைப் பார்த்தால், நிச்சயம் அப்படத்தின் கிளைமேக்ஸ் உங்கள் நினைவுக்கு வரும். அதுவே, பாலாஜி எங்கிருந்து ‘ஊக்கம்’ பெற்றிருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

திரைக்கதையின் இரண்டாம் பாதியில் வீரா பாத்திரம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் தெளிவாக விளக்கப்படவில்லை. அதனால், அவர் ஏன் மோதலைக் கைவிட்டு யோகிபாபுவுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது குழப்பத்தை உருவாக்குகிறது. அதேபோல, யோகிபாபுவின் நகைச்சுவை சில இடங்களில் காட்சியின் தன்மையையே குலைத்திருக்கிறது. அவற்றுக்கு உரிய தீர்வு கண்டிருந்தால், இந்தப் படம் சிறப்பானதொரு ‘பீல்குட் படம்’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.

அதேநேரத்தில், இந்தப் படம் பார்க்கும் எவரும் ‘நல்லா இல்ல’ என்று சொல்லிவிட முடியாத ஒரு வலுவான காரணத்தோடு உழைப்பைக் கொட்டியிருக்கிறது பாலாஜி வேணுகோபால் & குழு. ’மிகச்சாதாரண மனிதர்களே எப்போதும் அசாதாரணமான நாயகர்கள்’ என்று சொல்வதே அந்தக் காரணம்!

உதய் பாடகலிங்கம்

வாழ்வா சாவா ஆட்டத்தில் வங்காள தேசம்… வரிந்துகட்டும் ஆப்கானிஸ்தான்…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share