ஏற்காடு கோடை விழா: முன்னதாகவே தொடங்கப்படுவது ஏன்?

Published On:

| By admin

ஏற்காடு கோடை விழா 26ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டு முன்னதாகவே தொடங்குகிறது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இந்த ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 26ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருகிற 24ஆம் தேதி ஆத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டம் மற்றும் 26ஆம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு நாளைக்கு முன்னதாக அதாவது வருகிற 25ஆம் தேதி காலை 10 மணிக்கு 45ஆவது ஏற்காடு கோடை விழா – மலர் கண்காட்சி தொடக்க விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கிறார்கள். இதில் பல்வேறு துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறை திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் இடம்பெறுகின்றன. கோடை விழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், செல்ல பிராணிகள் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஏற்காடு அண்ணா பூங்காவில் ஐந்து லட்சம் அரிய மலர்களை கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழம் காட்சிகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஏரி பூங்காவும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கோடையிலும் ஏற்காட்டில் நல்ல சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து கோடை விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.

**-ராஜ்-**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share