திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மூன்றாம் தேதியிட்டு வெளியிட்ட அறிவிப்பு மே 4ஆம் தேதி முரசொலியில் வெளியானது.
இதைப் பார்த்து திமுகவின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள்.
அப்படி என்ன அறிவிப்பு அது?
21 மாநகராட்சிகளில் அரசினால் அறிவிக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் கழக வார்டு தேர்தல் நடைபெறும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
அதாவது இப்போது சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. ஆனால் சென்னை மாநகர திமுகவில் 400 வார்டுகள் அதாவது வட்டங்கள் இருக்கின்றன. இந்த அடிப்படையில் இப்போது சென்னை மாநகர திமுகவில் 400 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடக்க இருக்கும் உட்கட்சித் தேர்தலில் மாநகராட்சியில் இருக்கும் 200 வார்டுகள் போல் 200 வார்டு செயலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதேபோலத்தான் மற்ற 20 மாநகராட்சிகளிலும் திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
திருச்சி மாநகராட்சியை எடுத்துக் கொண்டால் மொத்தம் 65 வார்டுகள் இருக்கின்றன. ஆனால் மாநகர திமுக கட்சி அமைப்பில் 93 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அப்படி என்றால் வரும் உட்கட்சித் தேர்தலில் 65 வார்டு செயலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதி இருக்கும் 28 வார்டு அமைப்புகள் கலைக்கப்படும்.
திமுக தலைமையின் இந்த அறிவிப்பு சென்னை உள்ளிட்ட அனைத்தும் மாநகராட்சிகளில் உள்ள திமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தற்போது 400 வார்டு செயலாளர்கள் இருக்கும் நிலையில் அதில் சரிபாதியாக 200 வார்டு செயலாளர்கள் தான் இனி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அப்படி என்றால் மீதியிருக்கும் 200 வட்ட செயலாளர்கள் அந்தப் பதவியை இழப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு வட்டத்திலும் இருக்கும் 21 நிர்வாகிகளும் பதவி இழப்பார்கள். கணக்கிட்டுப் பார்த்தால் 200 × 21= 4200 நிர்வாகிகள் பதவி இழப்பார்கள். சென்னையில் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற 20 மாநகராட்சிகளிலும் பதவியிழக்கும் திமுக நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
இந்த அறிவிப்பை பார்த்து பல்வேறு வட்டச் செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள பல நிர்வாகிகள் நேரடியாகவே அறிவாலயம் சென்று அன்பகம் கலையை பார்க்க முயற்சித்திருக்கிறார்கள். அறிவாலய துணை மேனேஜர் ஜெயக்குமாரையும் இது தொடர்பாக பல நிர்வாகிகளும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இருவருமே கட்சி நிர்வாகிகளிடம் எந்தப் பதிலையும் தெரிவிக்காமல் உங்கள் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து நிர்வாகிகள் இதுபற்றி கேட்டுக்கொண்டே இருக்க ஒருகட்டத்தில் அன்பகம் கலை தன் போனையே எடுப்பதில்லை.
வட்டச் செயலாளர்கள் பதவிக்கு மட்டுமல்ல இதேபோல அரசு நிர்வாக அடிப்படையிலேயே மாவட்ட செயலாளர்கள் பதவியும் மறுவரையறை செய்யப்பட இருக்கிறது என்ற தகவலும் அறிவாலய வட்டாரத்தில் இருந்து அலை அடித்துக் கொண்டிருக்கிறது.
பல்வேறு மாவட்ட செயலாளர்களும் மாநகர மாவட்டங்களில் தத்தமது ஆதரவாளர்கள் அதிக அளவில் நிர்வாகிகளாக வேண்டுமென்பதற்காக
வார்டுகளை கட்சி அளவில் அதிகமாகவே பிரித்தார்கள். ஆனால் இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் அரசு நிர்வாக அடிப்படையிலேயே கட்சி நிர்வாகப் பதவிகளும் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக கட்சி நிர்வாகத்தை பிரிப்பதை அனுமதிக்க முடியாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் பொதுச் செயலாளரின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
வட்ட செயலாளர்கள் அடிப்படையிலான இந்த முடிவு அடுத்தடுத்து பகுதி செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் வரையும் அமல்படுத்தப்பட்டால் கட்சியில் சலசலப்பு உண்டாகும், பதவியில் இருந்த நிர்வாகிகள் பதவி இல்லை என்றால் அதன் விளைவுகள் கட்சிக்குள் எதிரொலிக்கும் என்றெல்லாம் அமைச்சரும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான நேரு திமுக தலைவர் ஸ்டாலினை சமாதானப்படுத்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
அதனால் தான் மாவட்டச் செயலாளர்கள் வரையறை அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. வட்டச் செயலாளர்கள் அறிவிப்புக்கு பிறகு அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் மறு வரையறை பற்றி ஆலோசனைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இடையில் திமுக தலைவரான முதல்வர் வணிகர்கள் மாநாட்டுக்காக திருச்சி சென்றதால் முடிவு எடுக்கப்படவில்லை. அதனால் இன்றும் அறிவாலயத்தில் ஆலோசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குறைந்த பட்சம் மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டால்… தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களில் சுமார் 10 மாவட்ட செயலாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால் வட்ட செயலாளர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் கட்சியை விட்டு யாரும் போக மாட்டார்கள் என்று தலைமை கருதுகிறது. பதவியிழக்கும் நிர்வாகிகளுக்கு வேறு பொறுப்புகள் தரப்படும் என்ற தகவலும் உலவிக் கொண்டிருக்கிறது.
அதேநேரம் ஸ்டாலினுக்கு நெருக்கமான சில மாவட்டச் செயலாளர்கள் தங்களை இதுகுறித்து சந்தித்த நிர்வாகிகளிடம் ஒரு சிறப்பு காரணத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.
“ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் திமுகவின் மாநகர வட்ட செயலாளர் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு இந்தப் போட்டியின் வீரியம் இருக்கலாம் என்றும் தலைவருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால், பதவியை இழந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பில் நிர்வாகிகள் தேடி வருவார்கள். அப்போது தலைமை சொல்பவர் தான் வார்டு செயலாளர்… அதை மீறினால் அரசு நிர்வாகப்படி எண்ணிக்கை வார்டு குறைக்கப்படும் என போட்டியிடும் நிர்வாகிகளை சமாளிப்பதற்காக தான் இந்த அறிவிப்பை தலைவர் வெளியிடச் சொல்லியிருப்பார். கவலைப்படாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருமா வராதா என்ற குழப்பம் இன்னமும் திமுகவினர் மத்தியில் நீடிக்கிறது.
**ஆரா**