சூப்பர் ஹீரோக்கள் படம் என்றால் நம் நினைவிற்கு வருபவை சூப்பர்மேன், பேட்மேன், கேப்டன் அமெரிக்கா, அயன் மேன், ஸ்பைடர்மேன் என குறிப்பிட்ட சில படங்களைச் சொல்லலாம். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அயன்மேன் படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் தொழில்நுட்ப போரினை முன்வைத்து வெளியாகியுள்ளன. அயன்மேன் திரைப்படம் மக்களின் நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமின்றி அதன் ஹீரோ ராபர்ட் டவ்னேவிற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர் மார்வெல் என்ற நிறுவனம் பெருமளவில் சூப்பர்ஹீரோ படங்களை வெளியிடத் தொடங்கியது. மார்வெல் நிறுவனத்தின் பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒன்றாக சேர்த்து புதிய திரைப்படம் எடுக்கும் முயற்சியை, இயக்குனர் Joss Whedon கடந்த 2012 ஆம் ஆண்டு மாபெரும் ஆக்சன் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கினார்
காண்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்திய அந்த முயற்சிக்கு பின்னர் அதன் தொடர்ச்சியாக மற்றொரு பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. காணும் நம் அனைவரையும் ஒரு கற்பனையான உலகிற்கு அழைத்துச் செல்வதை இந்த திரைப்படங்கள் தவறாமல் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் மற்றொரு பாகத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதனுடன் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என்பது பற்றியும், அங்குள்ள இயக்குனர்கள், நடிகர்கள், மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் பேசும் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் புதிதாக கார்டியன் ஆஃப் தி கேலக்சி திரைப்பட ஹீரோ, மற்றும் புதிதாக வெளியாகவிருக்கும் ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் ஹீரோவும் இனைந்துள்ளனர். புதிதாக பலர் இதில் இணைந்துள்ளது இந்த படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில், **கார்டியன் ஆப் தி கேலக்சி** திரைப்பட வில்லன் தனோஸ் சேர்ந்துள்ளது மற்றொரு பலம். கார்டியன் ஆப் தி கேலக்சி திரைப்படத்திற்கும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கும் என்ன தொடர்பு என்பது வெளியாக இருக்கும் கார்டியன் ஆப் தி கேலக்சி திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் இறுதியில் தெரிய வரும்.
இன்று வெளியான பர்ஸ்ட் லுக் ஆனது **கார்டியன் ஆப் தி கேலக்சி** மற்றும் **தோர்** திரைப்படத்தின் ஹீரோவினை கொண்டுள்ளது இருப்பினும் அதன் முடிவில் புதிய வடிவிலான அயன்மேன் செயற்கை கையினை ஒருவர் எடுப்பது போன்று முடிவடைகிறது. அது அயன்மேனுடையதா அல்லது வில்லனுடையதா என்பது சஸ்பென்ஸ்.,”
