யாத்திசை பார்த்த சீமான்: சொன்னது என்ன?

Published On:

| By Kavi

யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். கதைக்களமோ மிகப் பழையது. ஆனால் தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகிற்கும் புதிது.

ஏழாம் நூற்றாண்டில், நாகரீகமடைந்து வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பேரரசாக இருக்கும் பாண்டிய அரசினை, சிறுகுடிகளாக இருக்கும் எயினர்கள் எதிர்த்துக் கலகம் புரிந்து ஒரு கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள்.

ADVERTISEMENT

பெரும் படையோடு வந்த பாண்டியன் எயினர்களை முற்றுகையிட்டு அழிக்க முனைகிறான். ஆனால் மக்களைக் காக்க எயினர் தலைவர் தனி யுத்தத்துக்கு அழைப்பு விடுத்துப் போரிடுகிறார். இறுதியில் என்னவாகிறது? என்பதுதான் படம்.

வரலாற்றுத் திரைப்படங்கள் தொடர்பாக இந்திய திரையுலகம் உருவாக்கி வைத்திருக்கிற போலி பிம்பங்களை உடைத்திருக்கிறது இந்த யாத்திசை.

ADVERTISEMENT

ஒடுக்குமுறையின் நீட்சி அதிகாரம் என்ற ஒற்றை வரிதான் படம்.

வழக்கமாக வரலாற்றுப் புனைவு கதைகளை சினிமாவாக மாற்றும் வகையில் இருந்து மாறி ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன். இரு ராஜ்ஜியங்களுக்கு இடையே நடந்த போரையோ, அல்லது ஒரே ராஜ்ஜியத்துக்குள் அதிகாரத்திற்காக நடக்கும் சூழ்ச்சிகளும் தான் இதுவரை நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால் யாத்திசை ஒவ்வொரு அரசனுக்குப் பின்னும் ஒவ்வொரு போருக்குப் பின்னும் அதிகாரம் என்ற போதை இருப்பதைப் பற்றி பேசுகிறது. நல்ல அரசன், கெட்ட அரசன் என எவரையும் வரையறுக்காமல் அவர்களின் அதிகாரம் நோக்கிய பயணத்தை மட்டும் பதிவு செய்கிறது.

Yaathisai Movie Review and Seeman

அதிகாரம் ஒருவனை எப்படி மாற்றுகிறது, அதிகாரத்தை திரும்பப் பெற ஒருவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை பேசுகிறது. போர் என்பது வீரத்தை நிரூபிக்கும் களம், எத்தனை பேரை கொன்றோம் என்ற பெருமை போன்ற மாயைகளை பற்றி சொல்லாமல், போர் ஒரு காட்டுமிராண்டித் தனம் என்பதையும் குறிப்பிடுகிறது படம்.

ஏப்ரல் 21 அன்று உலகம் முழுவதும் வெளியான யாத்திசை தமிழ் சினிமா பார்வையாளர்களிடம் மட்டுமல்ல திரைக்கலைஞர்களிடமும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் யாத்திரை படைப்பாக்கத்தில் 700 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படமோ என கேட்க தோன்றுகிறது.

இந்த படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஏப்ரல் 24) பார்த்த பின்பு யாத்திசை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “யாத்திசை’ தமிழன் தொழ வேண்டிய திசை மட்டும் அல்ல, வரலாற்று மீட்சியுற்று தமிழன் எழவேண்டிய திசை” என பாராட்டியுள்ளார்.

“படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அனைத்தும் புதிய முயற்சிகள் என்பதைத் தாண்டி தமிழ்த்தேசிய இனமக்களுக்குத் தற்போது அவசியம் தேவையான ஒன்று என்பதில் பெரு மகிழ்வும், இந்தச் சிந்தனையை நினைத்து பெருமையும் அடைகிறேன்.

படத்தில் வரலாற்றுக் கருத்துக்கள் மற்றும் புதிய பொருள் பொதிந்த இலக்கியச் சொற்கள் இவைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தது வரலாற்று பேராய்வாளர் ம.சோ.விக்டர் நூல்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

Yaathisai Movie Review and Seeman

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் சொல்லுகின்ற செய்தி தமிழர் இனத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் காட்சியின் மூலமாகப் பதிவு செய்தமை வியப்பின் உச்சம்.

படத்தில் வரும் காட்சிகளில் ஒன்றாகிய வேலன் வெறியாட்டு நிகழ்வின் மூலம் நிகழ்த்துகின்ற கொற்றவை வழிபாடு நிகழ்வில் வருகின்ற இரண்டு நிமிட காட்சி அமைப்பிற்குள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வரலாற்றையும் சொல்லி இருப்பது தமிழர்களின் வரலாற்று மீட்புக் காட்சியாக நான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் வரும் போர்க்களக் காட்சியொன்றில் இறந்துபோன வீரர்களைத் திருப்பி மார்பினைப் பார்த்து, விழுப்புண் இல்லாதவர்களை நெஞ்சினில் வாளால் கீறி புதைக்கும் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்தேன்.

தற்காலத்தில் இளைய தலைமுறையினரால் தமிழரின் வீரம் பொதிந்த வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்ற நிறைவு எனக்கு வந்தது. இதுபோன்று படத்தின் ஓவ்வொரு காட்சிகளிலும் பொதிந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழர்கள் இந்தப் படத்தினைக் கொண்டாட வேண்டிய அவசியத்தின் காரணமாக நான் நினைப்பது பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து சொற்களை எடுத்து தமிழர் வாழ்வில் மறைக்கப்பட்ட செந்தமிழ் சொற்களை மீட்டுருவாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது. இலக்கியச் சொற்களை உரையாடல் மொழியாக வைத்திருப்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய பதிவு.

Yaathisai Movie Review and Seeman

பலநூறு கோடிகளைச் செலவிட்டுக் காட்டுகின்ற பிரமாண்டங்களை, முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மூலமாகப் படத்தயாரிப்புக் குழு மிகக்குறைந்த செலவினத்திலேயே செய்திருப்பது பாராட்டிற்குரியது.

கதையின் நாயகர்கள், கதையையும், இயக்குநரையும் நம்பி ஒரு ரூபாய் கூட இதுவரை ஊதியம் பெறாமல் நடித்து, படம் சிறப்பாக ஓடினால் நாங்கள் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி தமிழர் வரலாற்று மீட்சிக்குச் சேவையாற்றியிருக்கிறார்கள்.

படம், கதை. கருக்களம், பயன்படுத்தப்பட்ட உரையாடல் மொழி, நடித்த நடிகர்களின் கைதேர்ந்த நடிப்பு என அனைத்தும் படத்தினைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு 7ஆம் நூற்றாண்டில் வாழும் உணர்வை காட்சியின் ஊடாக நிகழ்த்தியிருப்பது சிறப்பிலும் சிறப்பு.

யாத்திசை என்ற வரலாற்று பேராவணத்தைப் படைத்த படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரனுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். படத்தில் நடித்த நடிகர்கள் சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, வைதேகி, சமர் மற்றும் படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன்,

இசையமைத்த சக்கரவர்த்தி, ஒலிவடிவம் செய்த சரவணன் தர்மா, ஆடை வடிவமைப்பு செய்த சுரேஷ் குமார், சண்டை காட்சிகள் அமைத்த ஓம் சிவ பிரகாஷ், கலை இயக்குநர் இரா.ரஞ்சித்குமார், ஒளியோவியம் படைத்த அகிலேஷ் காத்தமுத்து என அனைவரும் தங்கள் முழுமையான உழைப்பை இப்படத்தில் செலுத்தியுள்ளார்கள் என்பதைப் படம் பார்க்கும்பொது உணர முடிகிறது.

தமிழ் நிலத்தின் வரலாறு மீட்கப்படவேண்டும், தமிழர் நிலத்தில் தமிழர் அதிகாரம் பெறவேண்டும் என்று உழைக்கின்ற ஓவ்வொரு தமிழ்த்தேசியப் பிள்ளைகளும் மறக்காமல் தமது குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய அவசியமான படம் யாத்திசை.

யாத்திசை : தமிழன் தொழ வேண்டிய திசை மட்டும் அல்ல, வரலாற்று மீட்சியுற்று தமிழன் எழவேண்டிய திசை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் மீண்டும் ரஹானே

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share