கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதைக் குறைக்க சவுதி அரேபியாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே மூண்டுள்ள வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு இருப்பதால் எண்ணெய் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகள் தங்களது விநியோகத்தை உயர்த்த முடிவுசெய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருப்பதால் அதைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் குறித்து சவுதி அரேபிய நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சருடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ள சவுதி அரேபியாவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் கலித் அல்-ஃபலியா இந்தியா வருகை தந்துள்ளார். அவருடன் இதுகுறித்துப் பேசி, விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சவுதி அரேபியா இரண்டாம் இடம் வகிக்கிறது. 2017-18ஆம் ஆண்டில் மட்டும் சவுதி அரேபியாவிலிருந்து மொத்தம் 36.8 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.19 ஆகவும், டீசல் விலை ரூ.71.38 ஆகவும் இருக்கிறது.
