எதைச் சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியதாக உள்ளது. இயக்குநர் ராஜுமுருகன் குக்கூ, ஜோக்கர் என இரு படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார்.
இரு படங்களும் படைப்பு ரீதியாக, வசூல் அடிப்படையில் வெற்றி படங்களாக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களாக உள்ளது. ராஜுமுருகன் இயக்கியுள்ள மூன்றாவது படம் ஜிப்ஸி. ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
நேற்று (மே 20) இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை இயக்கிய இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்த நூலைத் தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு எளிய மனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தைக் கொண்டது இந்தப் புத்தகம். அதேபோல் ஜிப்ஸி படமும் அந்தக்களத்தை தாங்கி நிற்கக் கூடியதே என்கிறது படக்குழு.
**இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி**
முதலில் இந்தப் படம் மிகச்சின்னப் படம் என்று தான் நினைத்தோம். ஆனால், ட்ரெய்லரைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிச்சயம் இது பெரிய படம். ஜீவாவுக்கு இந்தப் படம் பெரிய மைல்கல்.
**இசையமைப்பாளர் டி.இமான் **
ஜீவா இந்தப்படத்தில் அடித்து துவம்சம் பண்ணி இருப்பார் என்று நம்புகிறேன். இயக்குநர் ராஜுமுருகன் எழுத்து மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. இன்று நான் சந்தோஷ் நாராயணன் இசைக்கு ரசிகனாக வந்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் பெரிதாக வெற்றியடையும்.
**இயக்குநர் மீரா கதிரவன் **
இந்தியாவைப் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று சொல்கிறோம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. இப்படியான சமகால அரசியலை இந்தப் படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன்.
**இயக்குநர் மாரி செல்வராஜ்**
நாம் பேச நினைக்கும் அரசியலை அதன் கலைத்தன்மை கெடாமல் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை அறிந்துவைத்திருப்பவர். இந்தப் படம் எதைத் தாங்கி நிற்கிறது என்பதை கணிக்க முடிகிறது. அண்ணன் இப்படியான படங்கள் எடுத்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. பரியேறும் பெருமாள் படத்துக்கு நான் பேசிய முதல் ஹீரோ ஜீவா தான். அவர் இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
**இயக்குநர் சரவண ராஜேந்திரன்**
இன்றைய சமூக அவலங்களைக் கேள்வி கேட்க இருப்பவன் ஜிப்ஸி. இப்படி ஒரு படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு நன்றி.
**இயக்குநர் கோபி நயினார் **
இந்தப் படம் மக்கள் நேசிக்கும் படமாக இருக்கும். இந்த மாதிரியான படங்களில் நடிப்பதற்கு சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும். என்னைப் போன்றவர்களுக்கு ராஜுமுருகன் தான் பெரிய நம்பிக்கை. அவர் அவரது அரசியலைத் துணிச்சலாகப் பேசி வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அவர் பதிவு செய்வதின் வழியாக எங்களுக்குப் பெரிய உந்துதலைக் கொடுக்கிறார்.
**இயக்குநர் சீனு ராமசாமி**
எனக்கு ராஜுமுருகன் மீது ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. ஜோக்கர் படத்தில் ஜனாதிபதியை விமர்சனம் செய்து ஜனாதிபதி விருது வாங்கியவர் அவர். ஒரு நேர்மையான பத்திரிகையாளராகப் பல பயணங்கள் மேற்கொண்டு பல அனுபவங்களைச் சேர்த்திருக்கிறார். இந்த ட்ரெய்லர் பார்த்து மிரண்டுவிட்டேன். ஜீவா தான் நடிக்க வந்த காலத்தில் இருந்து இப்படியான பெரிய பெரிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.
ஜிப்ஸி என்றால் பயணி. அந்த வகையில் சிறந்த பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும்.
**இயக்குநர் கரு.பழனியப்பன்**
ராஜுமுருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பல பேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தத் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
நான் தயங்கி கேட்டேன். ஆனால், அதைச் செய்து கொடுத்தார். நான் ஆஸ்பிட்டல் போகும் முன்பே அவர் அங்கிருந்தார். முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும்.
**தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி **
இந்தப் படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி ஜீவா, இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பெரிய வெற்றியாக அமையும். ஒரு தயாரிப்பாளராக அம்பேத்குமாருக்கு இந்தப் படம் நல்ல லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
**தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு **
எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமானாலும் அதற்குப் பொருளாதாரம் வேண்டும். தயாரிப்பாளர் இயக்குநருக்கு அதைச் செய்து கொடுத்து இருக்கிறார். அவருக்கு நன்றி. ஜீவா நல்ல உழைப்பாளி. இந்தப் படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது.
**மலையாள இயக்குநர் லால்ஜோஸ்**
முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னை தான் என்னை இயக்குநர் ஆக்கியது.
இந்தப் படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால், பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும்போது பெரிய பதற்றம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்தபோது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால், டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள் பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜுமுருகன் பெயரைத் தேடுவார்கள்.
**தேனிசை செல்லப்பா **
இந்தத் திரைப்படத்தில் நாடோடியாக வரும் ஜீவா மிகச் சிறந்த நடிகர். சாதி இல்லாமல் மதம் இல்லாமல் மனிதனால் வாழ முடியுமா என்றால் முடியும். அதை தொடர்ந்து உரக்கச் சொல்லுங்கள். அதை அம்பேத்குமார் போன்றவர்கள், ராஜுமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து செய்யும்போது நாங்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம்.
**எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் **
கலைகளை தனது ஆபரணமாகக் கொண்டு அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்தான் ஜிப்ஸி. ஜீவா இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த மேடையில் ஒரு புத்தகம் வெளியிட்டதற்கு ராஜுமுருகனுக்கு முதலில் நன்றி.
**பாடலாசிரியர் யுகபாரதி **
ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால், இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜுமுருகனுக்கு அண்ணனாக நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசிய விருது வாங்கி இருக்கிறான்; வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப் படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறான்.
தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளை உலகுக்குச் சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். மேலும் இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்.
**இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் **
முதன்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவுதான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப் படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரைக் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாகக் கொடுத்த ராஜுமுருகன் அவர்களுக்கு நன்றி. அனைத்து தரப்பினருக்கும் கர்னாடக இசையைக் கொண்டுசேர்க்கும் டி.எம்.கிருஷ்ணா இந்தப் படத்தில் பாடி இருக்கிறார். இந்தப் படத்தில் பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது.
**தயாரிப்பாளர் அம்பேத்குமார்**
நானும் ராஜுமுருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்ன பட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டிலிருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன்பின் இந்தப் படம் பெரிய படமாக வளரத் தொடங்கியது.

**நடிகர் ஜீவா**
ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்த மாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னிக்கு நம்ம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும்.
இந்தப் படத்துக்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப் படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்துதான்.
ராஜுமுருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜுமுருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். இந்த மாதிரியான ஆடியோ லாஞ்ச்கள் நிறைய நடக்க வேண்டும்.
பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்த மேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப் படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப் படம் மூலம் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி.
[ஜிப்ஸி டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=6EGKOEuUBws)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://minnambalam.com/k/2019/05/20/82)
**
.
**
[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://minnambalam.com/k/2019/05/20/57)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)
**
.





