Yகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்!

Published On:

| By Balaji

லாக் டவுன் நாட்கள் – எடையைக் கூட்டும் உணவு தேடல்

ஏதோ கொஞ்ச நஞ்சம் இயங்கிக்கொண்டிருந்த உடலுக்கு இப்போது ஒரு மாதத்துக்கும் மேலாக அசைவில்லை. பீன் பேக், சோஃபா, மெத்தை என சொகுசான இடங்களில் உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறோம். தூங்கும் நேரம் ஏடாகூடமாக மாறியிருக்கிறது.

எடை அதிகரிப்பது, சாப்பிட்டவுடன் தூக்கம், அதிக சோம்பலாக உணர்வது போன்ற எல்லாவற்றுக்கும் காரணம், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் தூக்கச் சுழற்சியை பாதிக்கும் அதிக அளவிலான உணவுகள்.

இவற்றை நாம் கவனிக்கத் தவறுவதோடு, மீண்டும் மீண்டும் இதே தவறுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் உணவுத் தேடல் அதிகரிக்கிறது. எடை கூடுகிறது.

தூக்கச் சுழற்சி மாறுபடும்போது அது உணவுத் தேடலில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். இதன் காரணமாக உணர்வுகளில் பெரும் தடுமாற்றம் ஏற்படும். மன அழுத்தத்தின் விளைவு, அதிகம் சாப்பிடுவதில் முடியும். இவை அனைத்தின் தொடர்ச்சியாக இந்த லாக் டவுன் நாட்களில் அதிகம் சாப்பிட்டுப் பழகி, எடை கூடிவிடுகிறோம்.

**உணவுத் தேடலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்…**

* இது நம் தூக்கச் சுழற்சியைக் கெடுத்துக்கொள்ளும் காலமல்ல, அதைச் சரிப்படுத்திக்கொள்ளும் காலம். 24 மணி நேரமும் வீட்டில்தான் இருக்கிறோம். அலுவலக வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமே முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கச்சென்றுவிடுவோம். அது நம் ஹார்மோன் சுழற்சியைச் சீராக்கும்.

* திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வோருக்கு வயிறு நிறைந்த உணர்வு சீக்கிரமே ஏற்படும். பசியையும் தாகத்தையும் தவறாகப் புரிந்துகொள்ளாமல், பசி போலத் தோன்றும்போது திரவ உணவு அருந்திப் பாருங்கள். தாகம் என்றால் உடனே கட்டுப்படும். தவிர, திரவ உணவுகள் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலில் நீர் வறட்சி ஏற்படாமலும் காக்கும்.

* மெதுவாக செரிமானமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளுடன், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடும்போது நீண்ட நேரத்துக்குப் பசி உணர்வு தலைதூக்காது.

* சில உணவுகளில் நமக்கு சகிப்புத் தன்மையின்மை இருக்கலாம். அது நமக்கே தெரியாமலிருக்கலாம். உணவுத்தேடலுக்கு அதுவும் ஒரு காரணம். சிலருக்கு குளூட்டன் உணவுகளில், வேறு சிலருக்கு பால் உணவுகளில் இந்த சகிப்புத்தன்மையின்மை இருக்கலாம். அந்த உணவுகளை அறவே கைவிட இதுதான் சரியான தருணம். அதாவது நமக்கு மிகப்பிடித்த உணவுகளைத் தியாகம் செய்வோம்… அதன் பலனாக நாம் விரும்பிய ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் உடல் இயக்கம். உணவுத் தேடலிலிருந்து விடுபட அது நிச்சயம் உதவும். வீட்டுக்குள் முடங்கிப்போயிருக்கும் இந்த நிலையில் எப்படி வொர்க் அவுட் செய்வது எனக் கேட்கிறவர்கள் உண்டு.

* வீட்டுக்குள்ளேயே சுலபமாகச் செய்யக்கூடிய வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். சூரிய நமஸ்காரம் போன்ற எளிய பயிற்சிகளும் உதவும். வீட்டுக்குள் இருப்போருக்கான சிம்பிள் உடற்பயிற்சிகளைப் பற்றிய நிறைய வீடியோக்கள், வழிகாட்டுதல்களைக் கடந்த சில நாள்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவையெல்லாம் எல்லாராலும் எளிதில் செய்யக்கூடியவையாகவே இருக்கின்றன. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

* வீட்டிலிருந்து வேலை செய்கிற இந்த நாள்களில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் நொறுக்குத் தீனிகளைத் தேடுவதைத் தவிர்க்க முடியவில்லையே என்பவர்கள் கடலை மிட்டாய், முளைகட்டிய பயறு சேர்த்து வீட்டிலேயே தயாரித்த பேல்பூரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பச்சை மாங்காய்த் துருவல், கொத்தமல்லி, வெங்காயம், மாதுளம்பழ முத்துகள், தயிர், சாட் மசாலா சேர்த்த சன்னா மசாலா போன்றவை ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் சாப்பிடலாம்.

* பொரித்த, வறுத்த உணவுகளையும் மைதா மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள்.

* முக்கியமாக, சரியான நேரத்துக்குத் தூங்குங்கள்… குறைந்த அளவிலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

உணவுத் தேடலின் காரணமாக அதிகம் சாப்பிடுவது, எடை கூடுவது என எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க இவையே தீர்வு.

[நேற்றைய ரெசிப்பி: தக்காளி திடீர்ச் சட்னி](https://minnambalam.com/k/2020/05/02/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share