இந்தியாவில் பாலின விகிதம் குறைவு: நிதி ஆயோக்!

Published On:

| By Balaji

நாட்டில் 21 பெரிய மாநிலங்களில் 2017இல் பாலின விகிதம் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பைப் பற்றிய பாலின விகித ஆய்வை நிதி ஆயோக் அமைப்பு மேற்கொண்டது. ஆரோக்கிய மாநிலங்கள், வளரும் இந்தியா என்ற பெயரில் நாடு முழுவதும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 2017இல் பாலின விகிதம் 10 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆய்வில் குஜராத்தில் மிக அதிக அளவாக, ஆயிரம் ஆண்களுக்கு 907 பெண்கள் என்று இருந்த எண்ணிக்கையானது 854 ஆகக் குறைந்துள்ளது. இது 2012-14இல் (அடிப்படை ஆண்டு) இருந்து 2013-15ஆம் (ஆய்வுக்கான குறிப்பிட்ட வருடம்) வரையிலான கணக்கின்படி 53 புள்ளிகள் குறைவு ஆகும். இதனால் குஜராத் முதலிடத்தில் உள்ளது.

இதைத் தொடர்ந்து பாலின விகிதத்தில் 35 புள்ளிகள் குறைந்து ஹரியானா இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் (32 புள்ளிகள்), உத்தரகாண்ட் (27 புள்ளிகள்), மகாராஷ்டிரா (18 புள்ளிகள்), இமாசல் பிரதேசம் (14 புள்ளிகள்), சத்தீஸ்கார் (12 புள்ளிகள்) மற்றும் கர்நாடகா (11 புள்ளிகள்) தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ADVERTISEMENT

இந்த அறிக்கையின்படி, பாலின விகிதத்தில் பஞ்சாப் 19 புள்ளிகளும், உத்தரப் பிரதேசம் 10 புள்ளிகளும் மற்றும் பீகார் 9 புள்ளிகளும் கொண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது.

நாடு முழுவதும் பெண் குழந்தையின் மதிப்பை ஊக்கப்படுத்தும் முறையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெண்ணின் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதனை செய்து, கருக்கலைப்பு செய்வதனால் பெண் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் நிதி ஆயோக் குழு நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share