‘இந்திய அளவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் இதுகுறித்து நேற்று (நவம்பர் 19) பேசிய அவர், “இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தொழிற்துறையில் தமிழ்நாடு 20 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களைப் பொறுத்தவரையில் 2014-15ஆம் ஆண்டில் 1,43,104 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாகும். ஒட்டுமொத்த இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 32.04 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது” என்றார்.
அண்மையில் வெளியான தமிழ்நாடு அரசுப் பணிக்கான அறிவிப்பில் வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து துணை முதல்வர் பேசியுள்ளார். கடந்த ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான் தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
