எக்ஸ் தளம் எலான் மஸ்க் வசம் சென்றது முதல் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. சந்தா திட்டம் மற்றும் கட்டணங்களை மாற்றியும், புதிதாக அறிவித்தும் வருகிறார். தற்போது எக்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இரண்டு புதிய சந்தா திட்டங்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1.பேசிக் சந்தா திட்டம்
2.ப்ரீமியம் ப்ளஸ் சந்தா திட்டம்
இரண்டு சந்தா திட்டம் பற்றிய விவரங்களையும், அதற்காக கட்டணத்தையும் வெளியிட்டுள்ளது எக்ஸ் தளம்.
பேசிக் சந்தா திட்டம்
இந்த பேசிக் சந்தா திட்டத்தில் எஸ்.எம்.எஸ், கஸ்டமைசேஷன், பதிவுகளை எடிட் செய்வது, மாற்றிக் கொள்வது மற்றும் பதிவிடுவது போன்ற அம்சங்கள் இடம் பெறும். இதன் கட்டணம் ஒரு மாதத்திற்கு மூன்று அமெரிக்க டாலர்கள்(3$) அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.243.75. இதில் ப்ளூ டிக் மற்றும் கிரியேட்டர் அம்சம் கிடைக்காது. விளம்பரங்கள் இடம்பெறும்.
ப்ரீமியம் ப்ளஸ் சந்தா திட்டம்
இதில் அனைத்து விதமான ப்ரீமியம் மற்றும் கிரியேட்டர் அம்சங்களும் கிடைக்கும். ப்ளூ டிக், கஸ்டமைசேஷன், எஸ்.எம்.எஸ், பதிவுகளை எடிட் செய்வது, மாற்றிக் கொள்வது மற்றும் பதிவிடுவது போன்றவை அடங்கும். ஏற்கனவே இருக்கும் ப்ரீமியம் (மாதம் ரூ.650) திட்டத்தில் குறைந்த அளவிலான விளம்பரங்கள் இடம்பெறும் ஆனால் ப்ரீமியம் ப்ளஸ் சந்தா திட்டத்தில் விளம்பரங்கள் இடம்பெறாது. இதன் கட்டணமாக 16 அமெரிக்க டாலர்கள்(16$) அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தா திட்ட மாற்றங்கள் அனைத்தும் எக்ஸ் தளத்தின் சந்தா வருவாயை உயர்த்தும் நோக்கம் கொண்டது என்றே பார்க்கப்படுகிறது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தேவர் நினைவிடத்தில் இரு மணிமண்டபம்!










